சர்வதேச முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை சமகால அரசாங்கம் நீக்கியது என்பது சிலரது தனிப்பட்ட கருத்தாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ,வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கவில்லை என்றார்.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்ட விதிகளுக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சினால் இந்த அமைப்புகள் மீதான தடை நீக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கமையவே 06 புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டது. அத்துடன் அண்மைக்காலமாக மேற்படி அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த தடை நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.