80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘அரங்கேற்ற வேளை’.
இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.
டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids
தமிழ் சினிமா பார்வையாளர்களுக்குப் புதுவிதமான நகைச்சுவை ருசியைத் தந்ததில், மலையாளத்திலிருந்து தமிழிற்கு வந்த சில ரீமேக் படங்களுக்கு முக்கியமான இடமுண்டு. சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன், ஸ்ரீனிவாசன் போன்ற படைப்பாளிகள் இதற்குக் காரணமாக இருந்தார்கள். இந்த வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் இயக்குநர் ஃபாசில். உணர்ச்சிகரமான கதைகளைக் கையாளத் தெரிந்த ஃபாசிலுக்கு அட்டகாசமான நகைச்சுவைத் திரைப்படங்களையும் தரத் தெரியும். காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் நிறையப் படங்களைத் தமிழிற்குத் தந்துள்ளார். அதில் ஒன்றுதான் ‘அரங்கேற்ற வேளை’.
இயக்குநர்கள் சித்திக் – லால் என்கிற இரட்டையர் கூட்டணியின் முதல் படமாக வெளிவந்த ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்கிற மலையாளப் படத்தின் மறு உருவாக்கமே ‘அரங்கேற்ற வேளை’. மலையாளத்தில் ‘சூப்பர் ஹிட்’ ஆன இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த ஃபாசில், தமிழிற்கு வரும்போது டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். தமிழிற்கு ஏற்ற வகையிலும், அதே சமயத்தில் மூலப்படைப்பின் ஆன்மா சிதைவுறாத வகையிலும் இயக்கிய ஃபாசிலை எத்தனை பாராட்டினாலும் தகும்.
‘அரங்கேற்ற வேளை’யின் பின்னணி
நண்பனிடமிருந்து வாங்கிய கடனை அடைப்பதற்காகச் சென்னைக்கு வருவார் பிரபு. அவருடைய தந்தை பணியாற்றிய ஒரு நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு பலர் இறந்து விடுவார்கள். வாரிசு சட்டப்படி பிரபுவிற்கு அந்த வேலை கிடைத்தாக வேண்டும். ஆனால் அதற்குத் தடையாக இருப்பார் ராசி. எனவே அந்தப் பணியைக் கைப்பற்றும் போராட்டத்தில் இருப்பார் பிரபு.
‘சக்தி நாடக சபா’ என்கிற காலாவதியாகிப் போன ஒரு நாடகக்குழுவை வைத்திருப்பார் வி.கே.ராமசாமி. சென்னையில் தங்குவதற்கு இடமில்லாமல் இந்த இடத்தில் அடைக்கலமாவார் பிரபு. இவரைப் போலவே இந்த இடத்தில் இன்னொருவரும் தங்கியிருப்பார். அவர் ரேவதி. ஏமாற்று வேலைகளின் மூலம் சம்பாதிக்கும் ரேவதிக்கும் பிரபுவிற்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடக்கும். “இந்த இடத்தை விட்டு உன்னை வெளியேத்திக் காட்டறேன் பாரு” என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்கள்.
பிரபு, ரேவதி, வி.கே.ஆர் ஆகிய மூவருக்குமே பணத்திற்கான தேவைகளும் அதற்குப் பின்னே நெகிழ்வான காரணங்களும் இருக்கும். தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கு உதவிய நண்பனுக்குத் தக்க சமயத்தில் பணத்தைத் திருப்பித் தர முடியாமல் தவிப்பார் பிரபு. கடனில் மூழ்கப் போகும் கிராமத்து வீட்டை மீட்பதன் மூலம் தன் அம்மாவைச் சந்தோஷப்படுத்தும் கனவில் இருப்பார் ரேவதி. நாடகக்குழுவைப் புனரமைத்து மீண்டும் அரங்கேற்றம் செய்யும் லட்சியத்தில் இருப்பார் வி.கே.ஆர்.
இந்த மூவரின் பணச்சிக்கலும் தீருமளவிற்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு தற்செயலாக அவர்கள் வீட்டு டெலிபோன் மணியை அடிக்கும். ஆனால் அதில் ஆபத்தும் கலந்திருக்கும். மூவரும் என்ன செய்தார்கள்? அந்தச் சவாலில் இறங்கி மீண்டார்களா, ஆபத்தில் சிக்கினார்களா என்பதைச் சுவாரஸ்யமும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருந்தார் ஃபாசில்.
பிரபு – ரேவதி – வி.கே.ஆர் – நகைச்சுவைக் கூட்டணி
ஒரு வளர்ந்த குழந்தையின் தோற்றம் பிரபுவிற்கு இயல்பாகவே அமைந்திருக்கும். எனவே காமெடி ரோல்களில் நடிப்பதென்பது தன்னிச்சையாகவே அவருக்குப் பொருந்தி விடும். இந்தத் திரைப்படத்தில், ‘சிவராம கிருஷ்ணன்’ என்கிற பாத்திரத்தில் ரகளை செய்திருப்பார். தங்கும் இடத்திற்காக வி.கே.ஆரிடம் பம்முவதாகட்டும், ரேவதியுடன் பல சமயங்களில் மல்லுக்கட்டுவதாகட்டும், வேலைக்காக ராசியிடம் ஆவேசமாகச் சண்டை போடுவதாகட்டும், பிறகு ராசியின் பின்னணியை அறிந்து “என்னையும் உன் அண்ணனா நெனச்சுக்கோ” என்று உருகுவதாகட்டும், ஒரு கடத்தல் திட்டத்திற்குள் தற்செயலாக உள்ளே விழுந்து திறமையாக சடுகுடு ஆட்டம் ஆடுவதாகட்டும்… படம் முழுவதும் விதம் விதமான உணர்ச்சிகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
ரேவதி ஒரு நடிப்பு ராட்சசி என்பது நமக்குத் தெரியும். ‘மாஷா’ என்கிற மறக்கவே முடியாத பாத்திரத்தை இதில் அவர் கையாண்டார். ஏமாற்றி லாபம் பார்க்கும் கில்லாடி பாத்திரமான இதன் பிரபலியம் காரணமாகத்தான் 2018-ல் வெளியான ‘குலேபகாவலி’ படத்திலும், 2019-ல் வெளியான ‘ஜாக்பாட்’ படத்திலும் இதே பாத்திரத்தின் தொடர்ச்சியாக ‘மாஷா’ என்ற பெயரிலேயே நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில், தனக்குப் போட்டியாகத் தங்கியிருக்கும் பிரபுவிற்கு விதம் விதமான ஏமாற்று வேலைகளின் மூலம் இம்சை தருவார். ஏர் ஹோஸ்டஸ் வேலை செய்வதாகவும் பெரிய வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும் தாயிடம் பொய் சொல்வார். “நம்ம கிராமத்து வீட்டுக்குப் போயிடலாம்மா” என்று இறுதியில் தாயின் மடியில் படுத்து நெகிழும் காட்சியில் கலங்க வைத்திருப்பார் ரேவதி. (மலையாளத்தில் இந்தப் பாத்திரத்தில் முகேஷ் நடித்திருந்தார். ஆம், அங்கே அது ஆண் கதாபாத்திரம்!).
“சம்பந்தி… அதுல பார்த்தீங்கன்னா…” என்று டெம்ப்ளேட் நடிப்பைக் கொண்டிருந்தாலும் சரியான விதத்தில் கையாண்டால் வி.கே.ஆர் பிரமாதமாக மின்னுவார். இதில் இவருக்கு நாயகனுக்கும் நாயகிக்கும் ஈடான பாத்திரம். பிரபுவிற்கும் ரேவதிக்கும் இடையில் பஞ்சாயத்து செய்து வைப்பதிலேயே இவரது தாவு தீர்ந்து விடும். அவர்களுக்குள் நடக்கும் சண்டையில் இவருக்குத்தான் நிறைய காயம் ஏற்படும். ‘நம்பிராஜன்’ என்கிற பாத்திரத்தில் படம் முழுவதும் கலக்கியிருப்பார். வேட்டி நழுவி விழுந்துவிடும் ஒரு காட்சியில் வி.கே.ஆர் செய்யும் காமெடி ரகளையானது. ஒரு பயங்கர சேஸிங் காட்சிக்குப் பிறகு வீட்டுக்குள் ஓடி வந்து விடும் வி.கே.ஆரிடம், “நம்பிண்ணா… இனிமே ஒண்ணும் பிரச்னையில்ல. பயப்படாதீங்க!” என்று பிரபு சொல்லும்போது திகில் விலகாத முகத்துடன் வி.கே.ஆர் சிரிக்கும் ஒரு காட்சியே அவரது நெடுங்கால நடிப்பு அனுபவத்திற்குச் சான்று.
சக்திநாதன் என்கிற தொழிலதிபருக்கு வரவேண்டிய தொலைபேசி அழைப்புகள், சக்தி நாடக சபாவிற்கு தவறுதலாக வரும். இந்தக் குழப்பம்தான் படத்தின் பிற்பாதியில் நிகழும் திரில்லர் காட்சிகளுக்கான அஸ்திவாரம். சக்திநாதனாக ஜெய்கணேஷ் சிறப்பாக நடித்திருந்தார். கடத்தப்படும் மகளாக நடித்திருந்தவர் அஞ்சு. பிரபுவின் நண்பனாக ‘நாயுடு’ என்கிற பாத்திரத்தில் வருவார் ஜனகராஜ். சில காட்சிகளே வந்தாலும் தனது நகைச்சுவை முத்திரையைப் பதிப்பதோடு தான் சென்னைக்கு வந்த காரணத்தை அவர் உருக்கத்தோடு சொல்லும் காட்சி அருமையானது. ‘கல்கத்தா கெமிக்கல்ஸ்’ நிறுவனத்தின் மேனேஜராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடியும் அருமை. “டேய் பேப்பரைத் தின்னுடாதடா…” என்று பிரபுவை இவர் துரத்தும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியாது. ‘பக்கிராம் ஸ்பீக்கிங்’ என்று மிரட்டும் வில்லன் நடிகர் விஜயராகவனும் குறிப்பிடத்தகுந்தவர்.
‘ஆகாய வெண்ணிலாவே…’ என்னும் அற்புதப் பாடல்
‘அரங்கேற்ற வேளை’ திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. சில இயக்குநர்களோடு கூட்டணி அமைக்கும் போது இளையராஜாவின் இசை கூடுதல் இனிமையுடன் உருவாகி விடும். ஃபாசில் அத்தகைய இயக்குநர்களில் ஒருவர். இந்த ஆல்பத்தின் கிளாசிக் பாடல் என்று ‘ஆகாய வெண்ணிலாவே’ பாடலைச் சொல்லி விடலாம். கே.ஜே.யேசுதாஸூம் உமா ரமணனும் மிக அருமையாகப் பாடியிருப்பார்கள். பழைய காலத்தின் இசையை நவீனத்தில் தோய்த்து தந்திருப்பார் ராஜா. இந்தப் பாடலில் பிரபு மற்றும் ரேவதியின் நடன அசைவுகள் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.
மனோவும் எஸ்.பி.சைலஜாவும் பாடியிருக்கும் ‘தாயறியாத தாமரையே’ பாடல் அற்புதமானது. ஒரு விசேஷமான அம்சத்தை இந்தப் பாடல் கொண்டிருக்கும். ஒரு அற்புதமான மெலடியாக இந்தப் பாடல் துவங்கும். சட்டென்று வேகமான தாளகதிக்கு மாறும். உருக்கத்தையும் உற்சாகத்தையும் எவ்வித உறுத்தலுமின்றி அற்புதமான ஒத்திசைவுடன் கூடிய கலவையாகத் தந்திருப்பார் இளையராஜா. கதையின் போக்கிற்கு உதவும் பாடல் இது.
மனோ உற்சாமாகப் பாடியிருக்கும் ‘குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்’ என்கிற துள்ளலிசைப் பாடலும் அருமையாக இருக்கும். படத்திற்கு இடையில் இதைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். சித்ராவும் மனோவும் இணைந்து பாடியிருக்கும் ‘மாமனுக்கும் மச்சானுக்கும்’ என்கிற பாடலும் கேட்பதற்கு மிக இனிமையானது.
ஒரு நல்ல ஃபீல்குட் திரைப்படம்
எழுபது மற்றும் எண்பதுகள் என்பது இன்றளவை விடவும் ‘வேலையில்லாத் திண்டாட்டம்’ அதிகமாக தலைவிரித்தாடிய காலக்கட்டம். தனது வேலைக்காக பிரபுவும் ராசியும் மல்லுக்கட்டும் காட்சிகள் இந்தச் சமூகப் பிரச்சினையை சிறப்பாகப் பிரதிபலித்திருக்கும். இருவரின் குடும்ப நிலைமைக்குமே அந்த வேலை என்பது மிக முக்கியமானது. மலையாளத் திரைப்படங்கள் தமிழிற்கு வரும் போது அவை பெரும்பாலும் சிறப்பாக அமைவதற்கு கோகுல கிருஷ்ணனின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். ‘அரங்கேற்ற வேளை’ திரைப்படத்திலும் அவரது நகைச்சுவை வசனங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். பல இடங்களில் இயல்பாகவும் வாய்விட்டு சிரிக்க வைப்பதாகவும் இருக்கும்.
காலாவதியாகிப் போன தனது நாடகக்குழுவை சீரமைப்பதற்கு முயல்வார் வி.கே.ஆர். ஆனால் ஒரு தவறான தொலைபேசி அழைப்பை வைத்துக் கொண்டு பிரபு அரங்கேற்றம் செய்யும் வில்லங்கமான நாடகம்தான், இந்தப் படத்தின் மையம். முதல் பாதி அட்டகாசமான நகைச்சுவையுடன் நகர்ந்து முடிந்திருக்க, அதற்குப் பிறகான காட்சிகள் திகிலுடன் பரபரப்பாக நகரும். குறிப்பாக, ‘பணத்தை எடுத்துக் கொண்டு ரேவதி தப்பித்து விட்டாரோ’ என்று நினைத்துவிட்டு பிரபுவும் வி.கே.ஆரும் செய்யும் ஒரு காரியமும் அதற்கடுத்து வரும் ‘ட்விஸ்ட்’டும் அருமையானது.
ஒரு இயல்பான ஃபீல்குட் நகைச்சுவைத் திரைப்படத்தைப் பார்த்தத் திருப்தியை உத்திரவாதமாகத் தந்திருப்பார் ஃபாசில். பிரபு, ரேவதி, வி.கே.ஆர், ஜனகராஜ், கோகுல் கிருஷ்ணா, இளையராஜா ஆகியோர்களின் மகத்தான கூட்டணியில், இன்று பார்த்தாலும் தனது புத்துணர்ச்சியை இழக்காமல் இருக்கிறது ‘அரங்கேற்ற வேளை’.