ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் குடிக்க தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் தாக்கப்பட்டதில் 9 வயது பட்டியலின மாணவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் இப்பிரச்னை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில் சில நாட்கள் மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் பானை
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடிநீர் பானையைத் தொட்டதற்காக ஆசிரியர் ஒருவர் ஒன்பது வயது பட்டியலின மாணவனை தாக்கியதால் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜலோர் மாவட்டத்தில் சுரானா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் இந்திரா மேக்வால் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேக்வாலுக்கு திடீரென தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தண்ணீர் பானையை தொட்டுள்ளார்.
வழக்குப்பதிவு
இதனால் ஆத்திரமடைந்த 40 வயதான சைல் சிங் என்ற ஆசிரியர் மேக்வாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூலை 20ம் தேதி அரங்கேறியுள்ளது. இதனையடுத்து, மாணவன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 14ம் தேதி வரை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேக்வால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர் மீது, கொலைக் குற்றம் மற்றும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக மாநில கல்வித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் இது குறித்து விரைவாக விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில எஸ்சி கமிஷன் தலைவர் கிலாடி லால் பைர்வா உத்தரவிட்டுள்ளார். ஜலோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஹர்ஷ் வர்தன் அகர்வாலா இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும், ஆசிரியர் சைல் சிங் மீது ஐபிசி பிரிவு 302 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
உயிரிழப்பு
மாணவன் மேக்வாலின் முகத்தில் காயங்கள் இருந்ததாகவும் இதனால் அவன் சுயநினைவை இழந்ததாகவும் மாணவனின் தந்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்த உடன் மாணவன் மேக்வால் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து உதய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இங்கு மேக்வால் ஒரு வாரமாக சிகிச்சை பெற்றிருந்ததாகவும், ஆனாலும் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மேக்வாலை அகமதாபாத்திற்கு கொண்டு கொண்டு சென்றதாகவும் மேக்வாலின் தந்தை கூறியுள்ளார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் என தந்தை தேவராம் மேக்வால் கூறியுள்ளார்.
ஆறுதல்
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சச்சின் பைலட் மாணவனின் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது, “இதுபோன்ற சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இதுபோன்ற சம்பவங்களுக்கு செக் வைக்க வேண்டும். இவற்றை தடுக்க சட்டங்களும், பேச்சுகளும் மட்டும் போதாது. அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்ற வலுவான செய்தியை அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறினார்.
விசாரணை
முன்னதாக இந்த சம்பவம் குறித்து ஏற்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் போராடிய சிறுவனின் உறவினர்கள் மீது தடியடி நடத்தினர். அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவும் மாநில அமைச்சர்களுடன் சிறுவனின் வீட்டிற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் குடும்பத்தினருக்கு சுமார் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
ராஜினாமா
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரான் மாவட்டத்தின் 25 கவுன்சிலர்களில் 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர். வார்டு எண்.29 கவுன்சிலர் யோகேந்திர மேத்தா, “மேக்வாலுக்கு ஆதரவாகவும், பட்டியலின மக்களை பாதுகாக்க அரசு தவறியதற்கு எதிராகவும் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளோம்” என கூறியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ பனா சந்த் மேக்வால் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.
முதலமைச்சர் அசோக் கெலாட் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார். ஆனால் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ‘பீம் ஆர்மி’ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.