இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத அளவுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் போராட்டங்கள் தொடர்ந்ததால், வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு கடந்த மாதம் 18-ம் தேதி முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் நிலைமை தற்போது சீரடைந்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, அவசரகாலச் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து வருகிற 18-ம் தேதியுடன் இலங்கையில் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வருகிறது.
கொழும்பு, சினமன் லேக்சைட் ஓட்டலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற “கல்விசார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில், இலங்கையில் புலம்பெயர் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் துலித பெரேரா, பொதுச் செயலாளர் உபாலி ஜயவர்தன உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM