புதுடெல்லி: அற்பமான வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள யுயு லலித் நேற்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அற்பமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அற்ப வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். நீதிமன்றத்தின் விலை மதிப்பற்ற நேரத்தையும், வளங்களையும் பயன்படுத்தி அற்பமான வழக்குகளில் தோற்கும் தரப்பினர் மீது அதற்கான செலவினத்தை சுமத்த வேண்டியது கட்டாயமாகும்.
உண்மையில் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, உச்ச நீதிமன்றத்தின் முதன்மையான செயல்பாடு என்பது சட்டத்தை வகுப்பதுடன் சிக்கலான அரசியலமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாகும்.
உச்ச நீதிமன்றத்தில் 7 அல்லது 8 நீதிபதிகள் இருந்தபோதும் கூட, ஐந்து நீதிபதிகளை ஒதுக்கி அரசியல் சாசன அமர்வை அமைக்க முடியும் எனும்போது தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 34 ஆக உள்ளது. எனவே, ஐந்து நீதிபதிகள் அடங்கிய நிரந்தரமான அரசியல் சாசன அமர்வை நிச்சயமாக உருவாக்க முடியும். இது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதும் கூட.
கடந்த காலத்தை நாம் உற்றுநோக்கும்போது ஏழே ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிபதி கிருஷ்ண ஐயர் 55 அரசியல் சாசன அமர்வுகளின் தீர்ப்புகளில் பங்கேற்றுள்ளார். அதேபோன்று, நீதிபதி பிஎன் பகவதியும் 113 தீர்ப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கரோனா காலத்தில் 2 ஆண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் தேங்கிய வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது. இதில் 4-ல் 1 பகுதி வழக்கு கடந்த 5 முதல் 20 ஆண்டுகளில் தொடுக்கப்பட்டவையாகும்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு விரைவாக நீதி வழங்குவதில் உள்ள தடைகள் அனைத்தையும் உணர்வுப்பூர்வமான வகையில் அகற்றப்பட வேண்டும்.
அதன்படி உச்ச நீதிமன்றம் என்ற வகையில், தவிர்க்கக் கூடிய, அற்பமான வழக்குகளை களையெடுக்க ஆரோக்கியமான நடைமுறையை நாம் உருவாக்க வேண்டும். பொது வெளியில் விளம்பரம் தேட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பலரால் பொதுநல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்படுகின்றன. எனவே, அதற்கும் கட்டுப்பாடுகள் தேவை. இவ்வாறு யுயு லலித் தெரிவித்தார்.