மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு கூடுதல் மருத்துவ கவனம் தேவை. சரியான மருத்துவ கண்காணிப்பு கொடுக்கப்படாத நிலையில், இறப்புகள் தவிர்க்க முடியாமல் போகலாம். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மகப்பேறு கால இறப்பைக் குறைக்க `தாய்கேர்நெல்லை’ (ThaicareNellai) என்ற நெட்வொர்க் அமைப்பு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது மகப்பேறு சுகாதாரம், பாதுகாப்பான பிரசவத்தை உறுதிப்படுத்துவதோடு, தரவுகளைச் சேகரித்து, மகப்பேறுகால ரிஸ்க்குகளின் அடிப்படையில் தாய்மார்களை வகைப்படுத்தி, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொடர் ஆலோசனைகள் வழங்கப்படும். மார்ச் மாதம் முதலே இத்திட்டம் செயலில் இருந்தாலும், மே மாதத்தில் இருந்து முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை மகப்பேறு இறப்புகள் 14 -ஆக பதிவான நிலையில், இந்தத் திட்டத்திற்குப் பிறகு, மூன்றே இறப்புகள் மட்டும் பதிவாகியுள்ளன. 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், எட்டு தாலுக்கா, தாலுக்கா அல்லாத மருத்துவமனைகள் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளன.
“பெருந்தொற்றுக் காலத்தில் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியபோது தான், இந்த யோசனை எங்களுக்கு வந்தது. இதேபோன்ற அமைப்பைப் பயன்படுத்தி மாவட்டத்தின் அதிகப்படியான மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டோம்.
கலெக்டர் வி.விஷ்ணு, இதற்கான முன்முயற்சிகளை எடுத்தார். மகப்பேறுகால இறப்புக்கான காரணங்களை மட்டும் ஆராயாமல், உடல்நலம் தொடர்பான ஆபத்துகளையும் குறைக்க இந்த அமைப்பு உதவுகிறது’’ என திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவப் பேராசிரியர் டாக்டர் எம். ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
முந்தைய கர்ப்பங்களில் ஏற்பட்ட உடல்நல பிரச்னைகள், இளவயது கர்ப்பம் போன்ற 55 பிரிவுகளின் கீழ் உள்ள தரவுகளின் அடிப்படையில், மகப்பேறு ரிஸ்க்கானது தீர்மானிக்கப்படுகிறது.
மே மாதம், மாவட்டத்தில் 4,600 பிரசவங்கள் அதிக ஆபத்துள்ளவை என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதன் விளைவாக, இதுவரை 2,018 பேருக்கு பாதுகாப்பான பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.