தருமபுரி: தருமபுரி அருகே சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பேடர அள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், பேடர அள்ளியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வி என்பவர் பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி இப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் என்ற முறையில் இந்த விழாவில் அவர்தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்திருக்க வேண்டும்.
ஆனால், அவர் தேசியக் கொடியை ஏற்றவும், வணங்கவும் மறுத்தார். இதனால், மற்றொரு ஆசிரியரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றவும், வணங்கவும் மறுத்த தலைமை ஆசிரியரின் செயலை கிராம மக்கள் கண்டிக்கிறோம். தேச அவமதிப்பு செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கேட்டபோது, ‘விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றனர்.