கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லோகநாதன் – கௌரி தம்பதியினர். இவர்களுடைய 4 வயது குழந்தை கேசவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மாதம் 07-ம் தேதி நள்ளிரவில் காணாமல் போய்விட்டதாக கூறி, குழந்தையின் தாய் கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், “குழந்தை உயிருடன் வேண்டும் என்றால் 4 கோடி ரொக்கம் வேண்டும்” என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த தொலைபேசி எண்ணை வைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்திய தனிப்படை போலீஸார், கடந்த மாதம் 16-ம் தேதி குழந்தையை கடத்திய சுந்தரசோழன், ஈஸ்டர்ஜாய், அருள்செல்வம், ரகுபதி ஆகியோரை அதிரடியாக கைது செய்ததோடு, குழந்தை கேசவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ச்சியாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, குழந்தையை கடத்திய குற்றச்செயலில் ஈடுபட்டதுடன், பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், சட்ட ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி வந்தனராம். எனவே, இவர்கள் அனைவரும் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதினாலும், இவர்களுடைய நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாகவும், ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்-க்கு பரிந்துரை செய்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்.
அதன்படி, குற்றவாளிகளாக கருதப்படும் நான்கு பேரையும் ஓராண்டு காலத்திற்கு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.
அதனைத் தொடர்ந்து, அந்த 4 பேரும் நேற்றைய தினம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்படுவார்கள்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.