‘நாங்கள் இவ்ளோ தூரம் உயர்ந்து நிற்க இவர்கள்தான் காரணம்’ – சூர்யா, கார்த்தி உருக்கம்

கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் சூர்யா கூட்டுக்குடும்பம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கார்த்தி, அதிதி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்த ‘விருமன்’ திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நேற்று விஜிபி கோல்டன் பீச் ரெசார்ட்டில் இந்தப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சூர்யா, கார்த்தி, பிரகாஷ்ராஜ், அதிதி, வடிவுக்கரசி, ராஜ்கிரண் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, “விட்டுக்கொடுத்து செல்வதுதான் குடும்பத்திற்கு அழகு. ஒன்றாக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல. சேர்ந்து இருப்பதற்கு நிறைய சகிப்புத்தன்மை வேண்டும். நம்மை விட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் மனம் வேண்டும். இந்த விஷயங்களை சினிமா மூலம் ஞாபகப்படுத்தி இருக்கிறோம். பலரும் படம் முடிந்து வெளியில் வரும்போது எங்கள் குழந்தைகளுக்கு இது பெரிய பாடமாக இருக்கிறது என்று கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படம் கிராமத்தில்தான் நன்றாக போகும், நகரத்தில் ஓரளவுக்கு தான் போகும் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நகரத்தில் எங்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. நான் கேட்டே டிக்கெட் கிடைக்கவில்லை. இந்த இரண்டு வருட கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிலேயே உட்கார்ந்து ஓடிடி-யில் கொரியன் படமாகப் பார்த்து பழகி இருப்பார்கள். தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்ப மாட்டார்களோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

image

ஒருவேளை நம் மக்கள் மாறிவிட்டார்களா? என்ன என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அப்படியெல்லாம் யாரும் மாறவில்லை. நம் பண்பாடு, கலாசாரம் என்றுமே மாறப் போவதில்லை என்பதற்கு ‘விருமன்’ படத்தின் வெற்றி, எடுத்துக்காட்டாகத் இருக்கிறது. இந்தக் கொண்டாட்டமே எங்கள் குடும்பங்களின் தியாகத்தால்தான் நாங்கள் வெளியில் சென்று உழைக்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி வெளியே அழைத்து சென்றிருக்கிறோமா? வாய்ப்பே இல்லை இல்லையா? ஆகையால், ஒரே நாளில் அனைவரையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

குழந்தைகள் இதனை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அம்மாவை அழைத்து வந்துருக்கிறோம் என்று கூறினார்கள், கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை நாள் அவர்களை வெளியே அழைத்து சென்றிருப்போம்? சாப்பாடு வாங்கி கொடுத்திருப்போம்? ஆகையால் தான் இந்த படத்தில் அதிதியை ஓட்டலுக்கு அழைத்து செல்லும் காட்சியை வைத்தோம்.

பெண்கள் அசதியாக இருக்கிறது, ஓட்டலுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கேட்பது சோம்பேறித்தனம் கிடையாது. தினமும் சமைத்துக் கொண்டிருக்கிறோம், ஒரு நாளைக்காவது சமைக்காமல் சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தான். அந்த வகையில் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவும், சந்தோசமாக இருக்கவும் தான் திட்டமிட்டு செய்தோம். அது சந்தோசமாக இருக்கிறது. விளையாடி பல நாட்கள் ஆகிறது. அதிதியிடம் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி. இப்படகுழுவினரும், பத்திரிகை நண்பர்களும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி. அனைவரும் கண்டிப்பாக உணவருந்தி விட்டு செல்லுங்கள். இந்த விழாவை சிறப்பாக உருவாக்கி கொடுத்த ராஜாவுக்கு நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

imageimage

விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்போது, “இதைவிட வேறு என்ன வேண்டும். இந்தப்படத்தின் கதை கேட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கார்த்தியிடம் நம்பி செய்வோம் என்று கூறினேன். முத்தையா கதை சொல்லும்போது அழுதுகொண்டே சொல்லுவார். இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் மேலே அன்பை காட்டி இருக்கிறார்கள். இங்கிருக்கும் கூட்டம்போலவே படப்பிடிப்பிலும் கூட்டமாகவே இருந்தோம். ராஜாவிற்கு நன்றி. பெரிய குடும்பம், நல்ல சாப்பாடு, எல்லோரிடமும் அன்பு.. இவைகளோடு நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. கார்த்தி, சூர்யா, பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் நகைச்சுவைக்கும் நன்றி. லவ் யூ ஆல்” என்றார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா கூறுகையில், “கொரோனா காலக்கட்டத்தில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த கடுமையான சூழலில் நடித்த, நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் ஏற்கெனவே நன்றி தெரிவித்துவிட்டோம். அவர்களைப் பற்றி அதிகம் பேசியுள்ளோம். ஆனால், கேமராவுக்கு பின்பு வேலை பார்த்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. தயாரிப்புப் பணிகளை செய்த ராஜாவுக்கு நன்றி. இப்படம் உருவாகுவதற்கு இயக்குநர் முத்தையா எப்படியோ, அதேபோல் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் வெளியாகும் வரை இருந்த ராஜாவும் முக்கிய காரணம். ராஜா மூலமாகத் தான் இந்த வெற்றியை இன்று அடைய முடிந்தது.

மனோஜ், செந்தில் சார், விஜய், மஹாதேவன், நந்து, கார்த்தி, குணா, சத்யா என இவர்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை. எந்தவித தங்கு தடையுமின்றி ‘விருமன்’ வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம். கார்த்தி சொன்ன வார்த்தைகள் தான், தனியாக இருந்தால் ஜெயிக்க முடியாது. குடும்பங்களின் தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை, அவர்கள் சுமக்கும் அத்தனை பாரமும் தான் செய்யும் தொழிலைத் தொடர்ந்து செய்யக் காரணமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

image

எங்களுக்கு பின் மிக பெரும் பலம் உள்ளது. எங்களை கை தூக்கி விடவும், எங்களை மேலே தூக்கி விடவும் காரணமாக இருப்பது எங்கள் குடும்பத்து பெண்கள் தான். என் அம்மா, மனைவி, என் மகள் ஆகியோர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று தெரியும். ஒரு ஆண் ஜெயிப்பது சுலபம். அதுவே ஒரு பெண் ஜெயிக்க 10 மடங்கு சிரமப்பட வேண்டும். பெண்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறார்கள். தன் வீட்டிலுள்ள மகனை முன் நிறுத்திவிட்டு அவர்கள் பின்தங்குகிறார்கள். இது போன்று நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம், தியாகம் என்ற சொல்லுக்குள் பல வார்த்தைகள் உள்ளது.

இங்கு அனைவரையும் வரவழைத்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டேன். அதை ராஜா மிகவும் அழகாக நடத்திக் காட்டியுள்ளார். அனைவருக்கும் நன்றி. என் தங்கை பிருந்தா மற்றும் செல்வி சொன்ன விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருகின்றனர். அதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி” இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.