சீன உளவுக் கப்பல் யுவான் வான்-5 இலங்கை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததை அடுத்து, தமிழக கடலோரப் பகுதியில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீன ராணுவத்திடம் உள்ள 7 உளவுக் கப்பல்களில் ஒன்றான யுவான் வாங்-5 பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டதாகும். 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களைக் கண்காணிப்பதுடன், செயற்கைக்கோள்கள், ஏவுகணைகளையும் ஆய்வு செய்ய முடியும்.
இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர பாதுகாப்பு அனுமதியை அளித்தது. இதையடுத்து நேற்று காலை யுவான் வாங்-5 கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.
சீன உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒருவாரம் நிற்கும் என்பதால், தென்இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்கள், அணுமின்நிலையங்களைக் கண்காணிக்கும் அபாயம் உள்ளது.
இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல்பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடற் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான 8 கப்பல்கள், 2 விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அம்பந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நோக்கத்திற்காக சீனா பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள கப்பலுக்கு, ஆய்வுக் கப்பல் என்பதன் அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.