மும்பையில் கடந்த வாரம் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் அதிகமான மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கெமிக்கல் எஞ்சினியர் ஒருவர் இதனை தொழிற்சாலையில் தயாரித்தது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குஜராத்திலும் இது தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. உடனே மும்பை போலீஸார் குஜராத்திற்கு சென்று அங்குள்ள அங்கிலேஷ்வர் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் அதிரடி ரெய்டு நடத்தி 513 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1,026 கோடியாகும். அதோடு போதைப்பொருள் தயாரிக்க தேவைப்படும் பொருள்களும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போதைப் பொருள் பெரும்பாலும் பார்ட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இப்போதைப்பொருளை தயாரித்த பிரேம் பிரகாஷ் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். பிரேம் பிரகாஷ் சிங் மருந்து வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர். இவரின் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் சமையலுக்கு பயன்படும் மெத்தம்பேட்டமைன் என்ற ரசாயானத்தை தயாரித்து வந்தார்.
அதன் பிறகுதான் இதில் வேறு சில பொருள்கள் சேர்த்தால் மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் தயாரிக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு அதனை தயாரித்து வந்துள்ளார். சிங் இதற்கு முன்பு மும்பை அம்பர்நாத் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சமையலுக்கு பயன்படும் மெத்தம்பேட்டமைன் தயாரித்து மகாராஷ்டிராவிற்குள் சப்ளை செய்து வந்தார்ம். அதன் பிறகு அம்பர்நாத் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரிக்க ஆரம்பித்தனர். போலீஸாரின் கெடுபிடி அதிகரித்ததால் உற்பத்தியை குஜராத்திற்கு மாற்றி இருந்தார்.
அம்பர்நாத் தொழிற்சாலையிலும் போலீஸார் ரெய்டு நடத்தினர். சிங்கிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது தெரியவந்திருக்கிறது. கிரிராஜ் கெமிக்கல் எஞ்சினியரிங் முடித்துள்ளார். அவர் மூலம்தான் போதைப்பொருள் எப்படி தயாரிக்க வேண்டும் என்று சிங் கற்றுக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். கிரிராஜும் கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஏற்கனவே குஜராத்திற்கு அடிக்கடி வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. கடலில் படகு மார்க்கமாகவும், கப்பல் மார்க்கமாகவும் குஜராத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது குறிப்பிடதக்கது.