மங்களூரு ; அத்தை உட்பட நான்கு பேரை கொன்ற பிரவீன் குமார் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவரை விடுதலை செய்வதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர், உறவினர்கள், அவரது மனைவி நிம்மதி அடைந்துள்ளனர்.தட்சிண கன்னடா மங்களூரின் வாமான்ஜுரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 64. சூதாட்டத்தால், பணத்தை இழந்தார்.
கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கினர். பணமின்றி திண்டாடிய பிரவீன் குமார், தன் அத்தையின் சொத்துகளை அபகரிக்க திட்டமிட்டு, ௧௯௯௪ல் அத்தை உட்பட நான்கு பேரை கொலை செய்தார்.இவ்வழக்கில் துாக்கு தண்டனை பெற்ற பிரவீன் குமார், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றியதை சுட்டிக்காட்டியதால், பிரவீன் குமாருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன்பின், 28 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்யலாம் என கடந்த ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது.நடப்பாண்டு, சுதந்திர தினத்தை ஒட்டி, அவர் விடுவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.
இதனால், அதிர்ச்சியடைந்த, அவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பிரவீன் மனைவி ஆகியோர் மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரை சந்தித்து, அவரை விடுவிக்க கூடாது என மனு கொடுத்தனர்.பின், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவை சந்தித்து, பிரவீன் மனைவி முறையிட்டார். இதையடுத்து, அவரை விடுதலை செய்வதை அரசு ரத்து செய்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு ஆலோசிக்கவுள்ளது.பிரவீன் குமார் விடுதலை செய்யப்படாததால், அவரால் பாதிக்கப்பட்டவர்கள், அவரது மனைவி, உறவினர்கள் நிம்மதி அடைந்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement