சென்னை: அதிமுக பொது குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்த நிலையில் அதனை எதிர்த்து பன்னீர் செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடரவும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பதவி ரத்து செய்யப்படுவதாகவும் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனை வரவேற்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஓபிஎஸ் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாட்டம்:
அதிமுக பொது குழு குறித்த உயர்நீதி மன்ற உத்தரவை வரவேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஜே.கே.வெங்கடாசலம் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
காட்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:
இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் டி.ஆர்.முரளி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பத்மா. எஸ் சரவணன் மாவட்ட மாணவரணி கிளைச் செயலாளர் SKY டி.வி சிவா மாவட்ட கலைப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.வி.ஆர் வெங்கட்ராமன் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் கே.வி.குப்பம் அருள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் விஜயகுமார் சாரதா பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையில் ஓபிஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்:
நெல்லையில் ஓபிஎஸ் ஆதரவால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்ட தர்மலிங்கம் மற்றும் சிவலிங்கமுத்து ஆகியோர் தலைமையில் கொக்கரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் அப்போது அவர்கள் ஓபிஎஸ் வாழ்க என்று கோஷம் எழுப்பினர் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி பெயர் ஜெயச்சந்திரன் ஜெயா என்ற ஜெயலலிதா சந்திரன் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் எனவே இருவரது ஆன்மாவும் தமிழகத்தில் நீதியை நிலைநாட்டி உள்ளது வரும் 2026 ஆம் ஆண்டு வரை ஓபிஎஸ் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று தெரிவித்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொண்டாட்டம்:
புதுக்கோட்டை ஓபிஎஸ் அணியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் அண்ணா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் இதில் ஓபிஎஸ் அணியின் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் கொண்டாட்டம்:
இன்று ஒபிஸ்யிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ஒபிஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் அதிமுக கழக நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வாழ்க என வாழ்த்து கோசங்களை எழுப்பியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.