தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கம்

ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக தற்போதைய அபிவிருத்திகள் குறித்து விளக்கமளிக்கும் முகமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2022 ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கொழும்பை தளமாகக் கொண்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்தார். சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இந்த விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.

அரசியலமைப்புக்கு அமைவாக பதவிகளை ஜனநாயக ரீதியாக மாற்றுதல் உட்பட இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகளை அமைச்சர் சப்ரி சுட்டிக் காட்டினார். மக்களுக்கான அதிக ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்த சில உடனடி சவால்களை எதிர்கொள்வதில் ஏற்கனவே காணக்கூடிய முன்னேற்றத்தின் பல பகுதிகளை அவர் விவரித்தார்.

அரசியல் முன்னணியில், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மேலும் விளக்கினார். 19ஆவது திருத்தத்தை திறம்பட மீட்டெடுக்கும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமையையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த நடவடிக்கை பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நிர்வாகக் கிளைகளின் மேற்பார்வைக்கும் மற்றும் முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்திற்கும் பங்களிக்கும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் விரிவான மீளாய்வுக்கான முன்னேற்றம் குறித்தும் அவர் விளக்கினார்.

மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்வதற்கும், மேலும் ஏற்றத்தாழ்வுகளைத் தடுப்பதற்கும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் பாதகமான தாக்கங்களை மக்கள் தொகையின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைத் தணிப்பதற்காக அரசாங்கம் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மைய ஆண்டுகளில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை நிலவிய போதிலும், கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர், உள்நாட்டு செயன்முறைகளின் மூலம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பான விடயங்களில் மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையுடனான தனது ஆக்கபூர்வமான ஈடுபாட்டை எதிர்வரும் 51ஆவது அமர்வில் இலங்கை தொடரும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வலியுறுத்தினார்.

நிதிச் செயலாளர் சிறிவர்தன, பாதகமான தாக்கங்களைத் தணிக்கும் நோக்கில், பாதிப்புக்குள்ளான குழுக்களுக்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார். அண்மையில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பான அரசாங்கத்தின் பிரதிபலிப்பு தொடர்பான சட்டக் கட்டமைப்பை சட்டமா அதிபர் விளக்கினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கட்டமைப்பின் பல நடைமுறைகள் மற்றும் செயன்முறைகளுடன் இலங்கையின் தொடர்ச்சியான மற்றும் விரிவான ஈடுபாட்டை வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன எடுத்துரைத்தார்.

விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி, சவால்களை எதிர்கொள்வதிலும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்துவதிலும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் மீளாய்வுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐந்தாண்டு கால ஒத்துழைப்புக் கட்டமைப்பில் இலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டுசேரும் என ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஆகஸ்ட் 16

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.