சென்னை: “அதிமுகவை யார் பிளவுபடுத்த நினைத்தாலும், அது நடக்காது” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், “அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் தலைமைப் பண்பு. நான் அரவைணைத்துச் செல்வேன்” என்றார் அவர்.
இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்ட அதிமுக பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அதிமுகவில் ஜூன் 23-ம் முன் இருந்த நிலைதான் நீடிக்கும் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்துதான் பொதுக் குழுவை கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை – மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தொண்டர்களின் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். யாரும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார் ஜெயலலிதா. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் செல்லாது என்றும், 23ம் தேதி இருந்த நிலை நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். தொண்டர்கள் விரும்பியது நடந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும், அது நடக்காது. சர்வாதிகாரம், ஒரு தனி நபர், ஒரு தனிக் குழுவின் கீழ் இந்த இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது.
அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளித்து நாங்கள் நடப்போம்.
விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் தலைமைப் பண்பு. நான் அரவைணைத்துச் செல்வேன். எனக்கு தொண்டர்கள் அளித்த பொறுப்புதான் ஒருங்கிணைப்பாளர். அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை. அதிமுக ஒரே இயக்கம்தான்” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.