பணவீக்கம் குறிப்பாக உணவுப் பணவீக்கம், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் பணக்காரர்கள் முதல் எழை மக்கள் வரையில் இந்த உணவு பணவீக்க உயர்வால் நேரடியாகப் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்தியாவின் ஜூன் 2022 பணவீக்க அளவுகள் மிதமான நிலை காணப்பட்டாலும், உணவுப் பணவீக்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6 முதல் 8 சதவீதம் என்ற மோசமான நிலையிலேயே தொடர்ந்து உள்ளது.
இந்த உயர் உணவுப் பணவீக்கம் ஒரு சராசரி இந்தியனை எவ்வாறு பாதிக்கிறது? என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு எளிய அளவீட்டைப் பயன்படுத்த உள்ளோம். ஒரு சராசரி இந்தியர் வீட்டில் ஒரு தாலி (Thali) மீல்ஸ் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்? என்பதை வைத்துப் பணவீக்கத்தைக் கணக்கிட உள்ளோம்.
ஒரு தாலி மீல்ஸ்
ஒரு சராசரி இந்தியர் சாப்பிட வேண்டிய ஒரு தாலி மீல்ஸ்-ல் என்னவெல்லாம் இருக்கும், என்னவெல்லாம் செலவாகும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அப்போது தான் ஏன் தாலி மீல்ஸ்-ஐ அளவு கோளாக எடுத்துக்கொள்கிறோம் என்பது விளங்கும்.
என்ன இருக்கும்
பொதுவாக ஒரு தாலி மீல்ஸ்-ல் தானியங்கள் (அரிசி மற்றும் கோதுமை), காய்கறிகள் பிரிவில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி பிரதான காய்கறிகளாகவும், கத்திரிக்காய், முட்டைக்கோஸ், வெண்டைக்காய் மற்றும் காலிஃபிளவர் பருவகாலக் காய்கறிகளாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பருப்பு, மசாலா, எண்ணெய்
இதைத் தொடர்ந்து பருப்பு வகைகள் (பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பயிர் மற்றும் உளுந்து), மசாலா (மஞ்சள், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் கொத்தமல்லி) மற்றும் உணவு எண்ணெய்கள் (கடுகு, தேங்காய் மற்றும் நிலக்கடலை எண்ணெய்).
சமையல் எரிபொருள்
இந்தப் பொருட்களின் விலையுடன் ஒரு தாலி மீல்ஸ் விலையில் சமையல் எரிபொருளின் விலையும் அடங்கும். தினசரி ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்திச் செய்ய, ஒரு நபர் இரண்டு தாலி மீல்ஸ்-களை உட்கொள்ள வேண்டும்.
சில்லறை விலை கணக்கீடு
இந்தத் தாலி மீல்ஸ்-ஐ தயாரிக்கத் தேவையான பொருட்களின் சில்லறை விலையுடன் இணைத்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட தாலி மீல்ஸ் விலையைக் கணக்கிட்டு பொருளாதார ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இதை 2019-20 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வின் (ES) ‘தாலினோமிக்ஸ்’ என்ற பிரிவின் கீழ் புதிய கணக்கீட்டு முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.
42 சதவீதம் உயர்வு
ஜூன் 2015 இல், ஒரு சைவ தாலி மீல்ஸ் விலை 16 ரூபாய்க்குக் குறைவாக இருந்தது (அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தாலி மீல்ஸ் சமைக்கச் சுமார் ரூ.31 மட்டுமே செலவானது). ஜூன் 2022ல் இதே தாலி மீல்ஸ்-ன் விலை ரூ.22 (அல்லது ஒரு நாளைக்கு ரூ.45). ஒரு தாலியின் விலை ஒட்டுமொத்தமாக 2015-2022 மத்தியில் சுமார் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
விலை வித்தியாசம்
மேலே கூறப்பட்ட விலை நிலவரம் அனைத்தும் light diet meal-கானது, இதுவே heavy diet தாலி மீல்ஸ் என்றால் இதன் விலை உயர்வு சுமார் 39 சதவீதமாக உள்ளது. ஜூன் 2015 இல் தாலி மீல்ஸ் ஒன்றுக்கு ரூ. 21 இல் இருந்து ஜூன் 2022 இல் ரூ.29 ஆக உள்ளது.
குடும்பப் பட்ஜெட்
ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மாதாந்திர தாலி மீல்ஸ் விலையானது light diet உணவுக்குச் சுமார் ரூ.4,700 (2015) இல் இருந்து சுமார் ரூ.6,700 (2022) ஆகவும், heavy diet உணவுக்கு ரூ.6,300லிருந்து ரூ.8,700 ஆகவும் உயர்ந்துள்ளது. இது வெஜ் தாலி மீல்ஸ்-க்கான விலை மட்டுமே.
ஏழை மக்கள்
உணவு பொருட்கள் விலை உயரும் போது ஏழை மக்கள் உணவு உட்கொள்ளும் அளவை குறைத்துக்கொள்வார்கள், இதனால் மக்கள் மத்தியில் ஊட்டச்சத்துப் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் இது நாட்டின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிக்கும்.
அனைத்திற்கும் மேலாக இந்த வெஜ் தாலி மீல்ஸ்-ல் தயிர், டீ, பழங்கள் சேர்க்கப்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.
Thalinomics: Cost of a veg thali meals has jumped 42 percent since 2015
Thalinomics: Cost of a veg thali meals has jumped 42 percent since 2015 ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களைப் பந்தாடும் விலைவாசி உயர்வு..!