மாஸ்கோ: உக்ரைன் போரை நீட்டிக்க விரும்பும் அமெரிக்கா உலகின் பிற நாடுகளிலும் போரை தூண்டுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டி உள்ளார்.
ரஷ்யாவில் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கை காணொலி மூலம் அந்நாட்டு அதிப்ர விளாடிமிர் புதின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
உக்ரைன் நிலவரத்தைப் பார்த்தால், போர் நீடிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புவதைக் காட்டுகிறது. இதுபோலவே, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் போரைத் தூண்ட அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சமீபத்தில் தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இது பொறுப்பற்ற செயல் மட்டுமல்லாமல், அந்த பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காகவும் பதற்றத்தை உருவாக்குவதற்காகவும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட பயணம் ஆகும். இது அமெரிக்காவின் திட்டமிட்ட, தந்திரமான செயல் ஆகும். பிற நாடுகளின் இறையாண்மையை அவமதிக்கும் வெட்கக்கேடான நடவடிக்கைதான் இந்தப் பயணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவம் கடந்த 6 மாதங்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், பண உதவி செய்து வருகின்றன. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக் கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.