Chennai High Court orders how ADMK general council will being held: ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இனி பொதுக்குழு கூட்டத்தை எப்படி கூட்ட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள்: ஜெயலலிதா சமாதியில் தலை வைத்து வணங்கிய ஓ.பி.எஸ்: தொண்டர்கள் ஆரவாரம்
அதேநேரம், அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அப்போது, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓ.பி.எஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்தார்.
அதில், அ.தி.மு.க.,வில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.
அதாவது பொதுக்குழு, செயற்குழுவை இந்த ஆண்டு இனி கூட்ட முடியாது. ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். யாரும் தனியாக கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுடன் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதிமுக பொதுக்குழு கூட்ட சட்ட ஆணையரையும் நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil