சிலருக்கு வெற்றி என்பது பல வருட கடின உழைப்புக்கு பிறகு கிடைக்கும். சிலருக்கு எளிதில் கிடைத்து விடும். சிலருக்கு என்னதான் கஷ்டப்பட்டாலும் வெற்றி கிடைத்திருக்காது.
ஒரு லிப்ட் பாய் உருவாக்கிய ஆடம்பரமான ஒரு பிராண்ட் இன்று உலகம் முழுக்க விரும்பப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? இது உழைப்புக்கு கிடைத்த வெற்றியா? அல்லது அதிர்ஷ்டமா படித்து பாருங்கள் புரியும்.
குஸ்ஸி என்ற இத்தாலிய பிராண்டினை பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
குஸ்ஸி
குஸ்ஸி என்பது பேஷன் மற்றும் தோல் பொருட்களை கொண்டு செய்யப்படும் இத்தாலியின் ஆடம்பர பிராண்டாகும். உலகளவில் பிரபலமான பல தரப்பு மக்களும் விரும்பும் ஒரு ஆடம்பர பிராண்ட் தான் குஸ்ஸி. குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக விருப்பமான ஒரு பிராண்டாக உள்ளது. இது துணிகள், காலணிகள், பேக்குகள், பெல்ட்கள்,சன் கிளாஸ்கள் என பல ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
குஸ்ஸி நிறுவனர் யார்?
உலகளவில் விரும்பப்படும் இந்த ஆடம்பர பிராண்டினை உருவாக்கியவர் குஸியோ குஸ்ஸி. இது 1921ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இன்று 100 ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த பிராண்ட், குறிப்பாக பயண பைகளுக்கு பேர் போன ஒன்றாகும். இது டஸ்கனி பகுதியினை சேர்ந்த கைவினை பொருட்கள் தயாரிக்கும் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகிறது.
லிப்ட் பாய் ஆக பணி
குஸ்ஸியின் பெற்றோர் டஸ்கன் பகுதியினை சேர்ந்தவர்கள் ஆவர். குஸ்ஸி தனது 17 வயதாகும்போது தனது நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு சவோய் ஹோட்டலில் லிப்ட் பாய் ஆக பணிபுரிந்துள்ளார். அங்கு லிப்ட்டில் பயணிக்கும் பயணிகளின் ஆடம்பர பொருட்களுக்கும், சாதாரணமான பொருட்களுக்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்துகொள்கிறார்.
குஸ்ஸி-யின் ஆரம்பம்
அதன் பிறகு முதல் உலகப் போரின் முடிவில் குஸ்ஸி இத்தாலிக்கு திரும்பியுள்ளார். 1921ம் ஆண்டில் அவர் La Casa Gucci நிறுவியுள்ளார் (ஹவுஸ் ஆப் குஸ்ஸி). இதில் திறமையான கைவினைஞர்கள் மூலம் உயர்தரமான ஹேண்ட்பேக்குகள், பேக்குகள் என பல உயர்தர பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் ஈர்ப்பு
1930களில் அவரது பிராண்டுகள் நல்ல வளர்ச்சியினை காண ஆரம்பித்தது. இது குறிப்பாக பல்வேறு சர்வதேச வாடிக்கையாளர்களை கவர்ந்தது. அவரது கடையில் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப பணிபுரிந்து வந்த குஸ்ஸி, விரைவில் வெற்றி கனியை ருசிக்கவும் ஆரம்பித்துள்ளார்.
பல சவால்கள்
எனினும் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய நினைத்தவருக்கு பல சவால்கள் காத்துக் கொண்டிருந்தன. குறிப்பாக அந்த காலகட்டத்தில் தோல் பெறுவதில் கடினமாக இருந்துள்ளது. ஆனால் குஸ்ஸியின் அடிப்படை பொருளே தோல் தான். எனினும் அதனை பொருட்டாக எடுத்து கொள்ளாமல், தோலுக்கு பதிலாக பட்டினை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
குஸ்ஸியின் இறப்புக்கு பிறகான பயணம்
சிறிய இடத்தில் சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்ட குஸ்ஸி, மிகப்பெரிய பிராண்டாக விரைவில் உருவெடுத்தது. இதற்கிடையில் 1953ல் குஸ்ஸி இறந்து நிலையில், அவரது மகன்களான ஆல்டோ. வாஸ்கோ மற்றும் ரோடால்ஃபோ குஸ்ஸி உள்ளிட்டோர் இதனை எடுத்து நடத்த தொடங்கினர். இதற்கான கடின உழைப்பையும் கொடுத்துள்ளார். இந்த கடின உழைப்பின் பலனே, இன்று ஹாலிவுட் பிரபலங்கள் வரையில் பிரபலமாக சென்றுள்ளது.
மகன்களின் நிர்வாகம்
ரோடால்ஃபோ குஸ்ஸி நிறுவனத்தின் இத்தாலிய நிர்வாகத்தினை கவனித்துக் கொண்டுள்ளார். மிலனில் ஒரு கடையை திறந்து கவனிக்க ஆரம்பித்துள்ளார். ஆல்டோ நியூயார்க்கிற்கும், வாஸ்கோ புளோரன்ஸில் உள்ள கடையையும் நிர்வாகம் செய்ய ஆரம்பித்துள்ளார். மெதுவாக இத்தாலிக்கு வெளியே செல்ல தொடங்கிய பிராண்டானது, மெல்ல அமெரிக்கா முழுவதும் விரிவடைய தொடங்குகிறது. குஸ்ஸி வேலை செய்த அதே சவோய் ஹோட்டலில் ஒரு சிறிய கடையையும் திறக்கின்றனர்.
மூங்கில் கையால் ஆன குஸ்ஸி பேக்
குஸ்ஸி பிராண்டில் மிக பிரபலமானது மூங்கில் வகையால் ஆன குஸ்ஸி பேக் தான். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மேல்தட்டு மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டது.
வருடங்கள் கடக்க கடக்க குஸ்ஸி தனது பிராண்டில் பல்வேறு பொருட்களை இணைத்து வந்தது. 90களில் அதன் பிராண்டில் ஜீன்ஸ்- ஐயும் சேர்த்தது. இது உலகின் மிக உயர்ந்த ஜீன்ஸ்களாக இருந்தன. 1998ல் மிலனில் 3134 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை சாதாரண ஜீன்ஸ்களை காட்டிலும் பல்வேறு எம்ப்ராய்டரி என பலவிதத்திலும் வித்தியாசப்படுத்தப்பட்டன. .
குடும்ப பிரச்சனை
எனினும் பின்னாளில் பல்வேறு குடும்ப பிரச்சனைகள், வழக்குகளுக்கு மத்தியில் குஸ்ஸி பிராண்ட் தனது மதிப்பினை இழக்க தொடங்கியது. அதன் பிறகு முதலீட்டாளர்கள் பிராண்டை மேம்படுத்த தொடங்கினர். 1990களில் டாம் போர்டு என்பவர் குஸ்ஸி-ல் இணைகிறார். இளம் வடிவமைப்பாளரான டாம் மீண்டும் பிராண்டுகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். மீண்டும் குஸ்ஸியில் ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறார்.
நவீன யுக்திகள்
டாம் பல நவீன யுக்திகளை கையில் எடுக்க தொடங்கினார். விளம்பரங்கள், மாடல்களை தேடினார். பல புதிய பொருட்களை பட்டியலில் சேர்த்தார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து டாம் குஸ்ஸியை விட்டு வெளியேறினார். தனது சொந்த பிராண்டினை உருவாக்கினார். இன்று வரையில் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுள்ளார். எனினும் இன்று வரையில் குஸ்ஸியில் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதிலும், இன்றும் வெற்றிகரமான பிராண்டாக நடைபோட்டு வருகின்றது.
GUCCI: A lift boy who has built a multi-billion-crore brand today
GUCCI: A lift boy who has built a multi-billion-crore brand today/லிப்ட் பாய் உருவாக்கிய ஆடம்பர பிராண்டு.. இன்று பல ஆயிரம் கோடிக்கு பிஸ்னஸ்..!