பாங்காக்: “வெளிநாட்டில் நான் இந்திய அரசியல் பற்றிப் பேசுவதில்லை” என்று கூறிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவுக்கு வந்து கேளுங்கள், இதே கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” என்று சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்து சென்றிருந்தார். பாங்காகில் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ஒருவர் “நான் தமிழர், தற்போது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறிப்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று வினவினார்.
அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர், ”நான் வெளிநாட்டில் இந்திய அரசியல் பற்றி பேசுவதில்லை. உங்களுக்கு இந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமானால் நீங்கள் இந்தியா வந்து கேளுங்கள். அங்கே நான் மகிழ்ச்சியுடன் பதிலளிப்பேன்” என்று கூறினார்.
இந்தியா – தாய்லாந்து உறவு, இந்தியாவில் தொழில் தொடங்குவது, இந்தியாவில் வெளிநாட்டு மாணாக்கருக்கான கல்வி வாய்ப்பு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தார்மிகக் கடமை: இந்தியா அண்மைக்காலமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தை மீறியும் இந்தியா துணிச்சலுடன் ரஷ்ய எண்ணெய்யை குறைந்த விலையில் இறக்குமதி செய்து வருகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டியிருந்தார். ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவின் துணிச்சல் பாகிஸ்தானுக்கும் இருந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கொள்கையை விளக்கிய ஜெய்சங்கர், ”என் நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப ஒப்பந்தங்கள் செய்வதில் எனக்கு தார்மிகக் கடமை உண்டு” எனக் கூறியிருந்தார்.
இந்தியாவிற்கு குடிபெயர்வது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “முன்புபோல் இல்லை. விசா நடைமுறைகள் இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஒரு நபர் பாஸ்போர்ட் பெறுவதற்கே பெரும்பாடு படவேண்டியிருக்கும், ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. பாஸ்போர்ட் எளிதாக பெரும் சூழல் உள்ளது. முதன்முதலில் நான் ஐஎஃப்எஸ் சர்வீஸில் இணைந்தபோது எனது உறவினர்களில் சிலர் இனி பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் இருக்காது என்று கூறினர். எங்கள் பணி அப்படித்தான் சாமானியர்களால் பார்க்கப்பட்டது. இப்போது சில தினங்களிலேயே பாஸ்போர்ட் கைகளில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது” என்றார்.
சீனப் பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிவது பற்றிய கேள்விக்கு, ”சந்தைகளில் வெளிநாட்டுப் பொருட்களுக்கு சவால் விடும் உள்நாட்டுத் தயாரிப்புகள் குவியும்போது இந்த நிலைமை சீராகும்” என்றார்.