உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள சின்ஹாட் பகுதியில் ஒரு குடோனிலிருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான கேட்பரி சாக்லேட் பார்கள் திருடு போயிருப்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சாக்லேட் பார்கள் திருடப்பட்டதையடுத்து, போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்ஹாட் பகுதியில் வசிக்கும் சாக்லேட் விநியோகஸ்தர் ராஜேந்திர சிங் சித்து என்பவர் தன்னுடைய வீட்டை சாக்லேட் குடோனாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ராஜேந்திர சிங் சித்து வெளியூருக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்பியபோது அக்கம் பக்கத்தினர் அவரின் சாக்லேட் குடோன் உடைக்கப்பட்டு சாக்லேட்டுகள் திருடப்பட்டிருப்பதாக அவருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து பதறிப்போன வர உடனடியாக தன்னுடைய வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார். அப்போது ரூ.17 லட்சம் மதிப்பிலான கேட்பரி சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர்கள் சாக்லேட்டுடன் சேர்த்து வீடியோ ரெக்கார்டர் மற்றும் சிசிடிவி கேமராக்களின் பிற உபகரணங்களையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. போலீஸார் சாக்லேட் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.