காபூல்: “தலிபான்கள் ஆட்சியில் ஓவ்வொரு நாளும் நாங்கள் பயத்திலேயே வாழ்த்து கொண்டிருக்கிறோம்” என்று ஆப்கன் பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை அவர்கள் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை அவர்கள் விதித்துள்ளனர்.
தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக தலைநகரில் பெண்கள் ஒரு வருடமாக போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் பெண்கள், தலிபான்களால் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து யால்டா ஹகிம் எனும் ஆப்கானிஸ்தான் பெண் அளித்த பேட்டி ஒன்றில், “தலிபான்கள் பதவியேற்கும்போது நாங்கள் முன்னர் இருந்த மாதிரி இல்லை. மாறிவிட்டோம் என்றனர். ஆம், தலிபான்கள் மாறி இருக்கிறார்கள். முன்பு இருந்ததைவிட மோசமாக மாறியிருக்கிறார்கள்.
21-ஆம் நூற்றாண்டில் இருந்துகொண்டு கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் எங்களுக்கு உரிமை மறுக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சிக் கொள்கிறோம். எங்களை அவர்கள் கல்வி கற்கவும், வேலைக்கு அனுப்பவும் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இங்குள்ள குடும்பங்கள் பல பிரச்சினைகளால் தர்வித்து வருகின்றனர். ஒட்டுமொத்த சமூகமாக நாங்கள் கைவிடப்பட்டிருக்கிறோம். அடிப்படை மனித உரிமைகள்கூட எங்களுக்கு அளிக்கப்படவில்லை. நாங்கள் வீட்டிலேயே 24 மணி நேரமும் இருக்கிறோம். இது எங்கள் மனநலனைக் கடுமையாக பாதிக்கிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது.
ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தலிபான்கள் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் நாங்கள் பயத்துடனே வாழ்த்து கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.