குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் உடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது என்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று மாலை சந்திக்கும்போது கடந்த சந்திப்பின் பொழுது வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து நினைவூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பிறகு டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதலமைச்சர், குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் சில காரணங்களால் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில், மரியாதை நிமித்தமாக இருவரையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் ஆட்சி நிலை மற்றும் அரசியல் சூழல் குறித்து பேசியதாகவும் இருவருடனான சந்திப்பு மன நிறைவாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேரில் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்க உள்ளேன்.
அதே நேரத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் பிரதமரிடம் வழங்கப்பட்டது. அதில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றும் தருவாயில் உள்ள நிலையில் மற்ற கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் நினைவூட்டல் செய்ய இருப்பதாகவும் குறிப்பாக நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை, மின்சார சீர்திருத்த மசோதா, காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நினைவூட்டப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக்கூடிய திட்டம் கைவிடப்பட்டு விட்டதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது அரசியல் காரணங்களுக்காக பேசப்படுவதற்கு தன்னால் பதிலளிக்க இயலாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வருகைதந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார். நீட் விலக்கு, கல்விக் கொள்கை, மேகதாது உள்ளிட்ட விவகாரம் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ’வரவு செலவு கணக்கு டூ கட்சி அலுவலகம்’-நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அதிமுகவில் என்ன நடக்கும்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM