“திமுகவின் கைக்கூலி
என்பது நிரூபணம் ஆகிவிட்டது என அதிமுக பொதுக்குழுவில் காட்டமாக பேசிய இபிஎஸ், என்னை பழைய பழனிசாமியாக நினைக்காதீர்கள்.” இவை கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஆக்ரோஷமாக
பேசியது. ஆனால், இன்று அந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாததாகி உள்ளது. ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதும் உறுதியாகி, அவரது பொருளாளர் பதவியும் திரும்பக் கிடைத்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் என்றாலும், கூட விடா முயற்சியாக கடுமையான சட்டப்போரட்டம் நடத்தி இந்த தீர்ப்பை தனக்கு சாதகமாக்கியுள்ளார் ஓபிஎஸ். அவரது இந்த மன உறுதியும் அண்மைக்கால நடவடிக்கையும், அவர் பழைய ஓபிஎஸ் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக உள்ளது.
ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்த இரண்டு தருணங்களில் அவரால் முதலமைச்சராக்கப்பட்டவர்
. அதற்கு முன்பாக, எவ்விதத்திலும் செய்திகளிலும் அடிபடாத ஓர் அரசியல்வாதியாகவே இருந்த ஓபிஎஸ்ஸை ஜெயலலிதா தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘நம்பிக்கை, விசுவாசம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான்’ என்று கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா பேசியது ஓபிஎஸ்ஸின் விசுவாசத்தை காட்டியது. ஜெயலலிதா வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக, அவரிடமே மீண்டும் முதல்வர் பதவியை ஒப்படைத்தார் ஓபிஎஸ்.
ஒவ்வொரு முறையும், கட்சிக்குள் தனக்கிருந்த ஆதரவால் இல்லாமல், கட்சியின் தலைமை அளித்த பொறுப்புகளில் ஒன்றாகவே முதல்வர் பதவியை ஓபிஎஸ் வகித்தார். எனவே, அவருடைய உண்மையான மக்கள் செல்வாக்கு என்னவென்று வெளிப்படையாக யாருக்கும் தெரியாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், முதல்வராகும் முயற்சிகளில் சசிகலா ஈடுபட்டபோது, முரண்டுபிடித்த ஓபிஎஸ், தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போது, கட்சியின் பிரமுகர்கள் பலரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர், மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் நின்றனர். அந்ததருணத்தில் ஓபிஎஸ்ஸால் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆட்களை தன் பக்கம் திரட்ட முடிந்தது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கதை வேறு. அவரை முதல்வராக்கி விட்டு சசிகலா சிறை சென்றார். தர்மயுத்த காலத்தில் ஓபிஎஸ் பின்னணியில் பாஜக இருந்தது அனைவரும் அறிந்ததே. இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின்னர், கட்சியிலும் சரி; ஆட்சியிலும் சரி; அதிகாரத்தை ஓபிஎஸ்ஸிடம் அளிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கி விருப்பமில்லை. துணை முதல்வர் பதவிதான் கிடைத்தது. கட்சியின் தலைமைப் பொறுப்பும் முழுமையாக கிடைக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஓபிஎஸ்ஸை நம்பி வந்தவர்களுக்கு பெரிய பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கே அதிகளவில் சீட் கிடைத்தது. அதற்குள்ளாக, முதல்வர் பதவி, கொங்கு லாபி, ஸ்வீட் பாக்ஸ்களை தாராளமாக இறக்குவது உள்ளிட்டவைகளால் கட்சியை கிட்டத்தட்ட தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, கட்சியை தன் வசப்படுத்த, ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க முடிவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதற்கு ஓபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், அணிகள் மீண்டும் பிரிந்தன. ஆனால், கடந்த முறை ஓபிஎஸ் பக்கம் நின்றவர்கள் கூட இந்த முறை எடப்பாடி முகாமுக்கு மாறியிருந்தனர். இதிலிருந்து எடப்பாடியின் லாபியை புரிந்து கொள்ள முடியும். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட வெகு சிலரே ஓபிஎஸ் பக்கம் இருக்கின்றனர்.
ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவில் ஓபிஎஸ் நுழைந்தபோது, பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருந்தனர் என்பது தெளிவாக தெரிந்தது. இதனை ஓபிஎஸ்ஸும் அறிந்தே வைத்திருந்தார். அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸுக்கு ஏராளமான அவமானங்களும் ஏற்பட்டன.
1980களில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், ஓருபோதும் தனக்கென ஒரு கோஷ்டியை அவர் உருவாக்கியதில்லை. தலைமை சொல்வதைச் செய்வோம் என்று இருப்பார். அதுதான் அவருடைய பலவீனம். ஆனால், குறைந்த காலத்திலேயே கட்சியை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் எடப்பாடி. எல்லா முடிவுகளையுமே எடப்பாடிதான் எடுத்தார். அதனை ஓபிஎஸ்ஸால் தடுக்க முடியவில்லை. ஒரு முறை கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதால் மீண்டும் அது நிகழாமல் இருக்க விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று என்று ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள் கூறினாலும், கட்சியில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க முடியாதவர் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதா என்ற நீதிபதியின் கேள்வியை இங்கு நினைவு கூர வேண்டும்.
எனவே, இது விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். சென்னை உயர் நீதிமன்றம் ஓபிஸ்ஸுக்கு அளித்திருப்பது இடைக்கால நிவாரணமே. அதற்குள்ளாக, விரைவாக செயல்பட்டு கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற வியூகங்களை அவர் வகுக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதேசமயம், அனைத்து விஷயங்களிலும் விட்டுக் கொடுத்துவிட்டு, விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று வசனம் பேசுவது ஓபிஎஸ்ஸின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், அரசியலுக்கு இதெல்லாம் சரிபட்டு வராது. இதனை ஓபிஎஸ் உணர்ந்திருப்பதை விடாப்படியான அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.