சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் குமார் என்கிற குள்ள குமார் (21). இவர்மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. கடந்த 16.8.2022-ம் தேதி மாலையில் நுங்கம்பாக்கம் டேங்க் பன்ட் சாலையில் உள்ள கடை வாசலில் நண்பர்களுடன் குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், குமாருடன் தகராறில் ஈடுபட்டது. பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரை குத்திவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த குமாரை அந்தப் பகுதியில் உள்ளவர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குமாரின் சகோதரர் கொடுத்த புகாரில் கொலை முயற்சி உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.வி.டி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல், குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆட்டோவின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியபோது நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த தனசேகர் என்கிற சாம்பார் (26), ராஜா (33), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் (30) ஆகிய மூன்றுபேர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, இரண்டு கத்திகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த குமார், உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றினோம். பின்னர், கைதானவர்களிடம் விசாரித்தபோது, குமாரின் அண்ணன் தாமோதனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் கடனுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால் ஆட்டோவுக்கான கடன் தொகையை தாமோதரன் சரிவர செலுத்தவில்லை. அதனால் தாமோதரனுக்கும் தனசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது பணத்தை செலுத்தவில்லை என்றால் ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவேன் என தனசேகர் மிரட்டியிருக்கிறார்.
இந்தச் சூழலில் புஷ்பா நகரில் உள்ள கோயிலில் திருவிழா நடந்திருக்கிறது. அந்த விழாவில் தாமோதரன், அவரின் சகோதரர் குள்ளகுமார், தனசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது மீண்டும் தனசேகருக்கும் தாமோதரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த குள்ளகுமார், தன்னுடைய அண்ணனுக்காக கத்தியை எடுத்து தனசேகரைக் குத்தியிருக்கிறார். இதில் காயமடைந்த தனசேகர், சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் குள்ள குமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த குள்ள குமாரைப் பழிவாங்க தனசேகர், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரைக் கொலைசெய்திருக்கிறார். கைதான பார்த்திபன்மீது கொலை வழக்கு இருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்.”