உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் போரில் இறந்திருக்கின்றனர். உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டாலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இந்த நிலையில, இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துப் போரிடும்போது, உக்ரைன் இந்தியாவிடமிருந்து அதிக நடைமுறை ஆதரவை எதிர்பார்க்கிறது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யில் உக்ரைனின் ரத்தம் இருக்கிறது. இந்தியாவுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெய்யிலும், உக்ரேனிய ரத்தத்தின் பெரும் பகுதி உள்ளது. நாங்கள் இந்தியாவுடன் நட்புறவாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறோம். இந்தியாவும் உக்ரைனைனும் இரண்டு ஜனநாயக நாடுகள். இரண்டு ஜனநாயக நாடுகளும் ஒன்றோடொன்று நிற்கவேண்டும்” என்றார்.
அண்மையில், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.