கோவை மாவட்டம், ஆனைக்கட்டி அருகே தமிழ்நாடு – கேரள எல்லை பகுதியில் 8 வயது யானை உடல்நலக்குறைவுடன் காணப்பட்டது. சீங்குளி கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் அந்த யானை உணவு எதுவும் உட்கொள்ளாமல் இரண்டு நாள்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தது.
இரு மாநில எல்லை என்பதால், தமிழ்நாடு – கேரளா வனத்துறையினர் இடையே யானைக்கு யார் சிகிச்சையளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. ”எல்லைச் சண்டையை பிறகு வைத்துக் கொள்ளுங்கள் முதலில் யானையை கவனியுங்கள்” என்று பல்வேறு தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இதையடுத்து அந்த யானையை கண்காணித்து சிகிச்சையளிக்க இரு மாநில வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனிடையே, நேற்று காலை முதல் அந்த யானை எங்கு சென்றது என வனத்துறையினருக்கு தெரியவில்லை. ட்ரோன் மூலம் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், யானைக்கு சிகிச்சையளித்து மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக டாப்ஸ்லிப் முகாமில் இருந்து கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் 7 குழுக்களாக பிரிந்து, 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல கேரளா வனத்துறையினரும் சிறப்புக் குழு அமைத்து, யானையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் அந்த யானை தோலம்பாளையம் செங்குட்டை அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சையளிப்பதற்காக, கும்கி யானையுடன் வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். ஆனால், யானையின் உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது என்பது பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. யானையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது வனத்துறை.