வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :புதுடில்லியை சேர்ந்த தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறித்த சுகேஷ் சந்திரசேகர் மீதான வழக்கில், ‘பாலிவுட்’ நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை குற்றவாளியாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
புதுடில்லியை சேர்ந்த தொழிலதிபர்கள் மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி முறைகேடு செய்த வழக்கில், 2019ல் கைது செய்யப்பட்டு, புதுடில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, ‘ஜாமின்’ வாங்கி தருவதாக, தமிழகத்தை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அவர்களது குடும்பத்தினரை ஏமாற்றி, 215 கோடி ரூபாய் பணம் பறித்துள்ளார்.இந்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரிய பால் ஆகியோரை, அமலாக்கத் துறை கைது செய்தது. அவர்கள் மீது, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுடில்லி நீதிமன்றத்தில், சுகேஷ் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த முதல் குற்றப் பத்திரிகையில், ஏமாற்றி பறித்த பணத்தில் ‘பாலிவுட்’ நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு,
ரூ.5 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றை சுகேஷ் வழங்கியதாக அமலாக்கத் துறை குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து, ஜாக்குலினிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், அவரது 7 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கினர்.இந்நிலையில், இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு வழங்கப்பட்ட பரிசுகள், ஏமாற்றி பறிக்கப்பட்ட பணத்தில் இருந்து வாங்கப்பட்டது தெரிந்தும், ஜாக்குலின் அவற்றை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வழக்கில், அவரும் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement