நியூயார்க்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் மீது தாக்குதல்; சல்மான் ருஷ்டி விவகாரத்தில் பாஜக மவுனம் காப்பது ஏன்? ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மோடி காலத்தில் நடந்த பரபரப்பு தகவல்

புதுடெல்லி: நியூயார்க்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடந்த கொலை வெறி தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தும், பாஜக தொடர்ந்து மவுனம் காப்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த 12ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மர்ம நபரால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அவரது ஒரு கண் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள், சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த தாக்குதல் குறித்து ஒன்றிய அரசோ அல்லது இந்திய அரசியல் கட்சிகளோ எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாறாக மவுனம் காத்து வருகின்றன. இதன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கடந்த 1988ம் ஆண்டில் வெளியான சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ புத்தகத்தைத் தடை செய்ய அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு முடிவு செய்தது. அதற்கு குறிப்பிட்ட சமூகத்தை சமாதானப்படுத்த காங்கிரஸ் அரசு செயல்படுவதாக பாஜக விமர்சித்தது. அதன்பின் கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு, சல்மான் ருஷ்டி இந்தியாவுக்கு வருவதற்கு விசா வழங்கியது. இவ்வாறாக சல்மான் ருஷ்டி விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வந்த நிலையில், தற்போது மவுனம் காத்து வருகிறது. ஆனால் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து பாஜக தரப்பில் இருந்து எதிர்வினை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சித் தலைவர்கள் எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தற்போதைய சல்மான் ருஷ்டி விவகாரத்தில் சிக்கிக் கொள்வதை பாஜக தலைமை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆட்சியில் இருப்பதால், ஒன்றிய அரசை சங்கடமான நிலைக்கு தள்ளும் வேலைகளில் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் பிரதமர் மோடி வெளிநாடுகளில் தனது இமேஜ் குறித்து மிகவும் கவனமாக இருப்பதால், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதையும் தலைவர்கள் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, தைவான் அருகே சீன ராணுவப் பயிற்சிகள் குறித்த விவகாரத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலர் கருத்து கூற தயாராக இருந்தனர். ஆனால் மேலிட உத்தரவால் அவர்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இருந்தும் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு எதிர்வினை என்ற பெயரில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த வாரம் பெங்களூருவில் கூறுகையில், ‘நானும் இதைப் பற்றி படித்தேன். உலகம் முழுவதும் பல நாடுகள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளன’ என்றார். ஏற்கனவே நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளின் எதிர்ப்பை சந்தித்த பாஜக, சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் விஷயத்தில் மவுனமாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இதுவும் கருதப்படுகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் பிரதமர் மோடி குறித்து சல்மான் ருஷ்டி கடுமையாக விமர்சித்தார். அதாவது, இந்திய பிரதமர் மோடியை நாட்டை பிளவுபடுத்தும் மனிதர் என்றும், அடிப்படைவாதிகளின் வெறியர் என்றும், பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எப்படியாகிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, இந்தியா தரப்பில் எவ்வித கண்டனமும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.