தமிழ் திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரி வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமடைந்தார். அந்தப் படத்தில் அவர் செய்திருந்த பரோட்டா காமெடி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டுவருகிறார். ஆரம்ப காலத்தில் கடுமையான கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியினாலும், திறமையாலும் கோலிவுட்டின் முக்கியமான காமெடி நடிகராக சூரி வலம் வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சூரி ந்டித்திருக்கிறார். மேலும் தற்போது எந்தத் திரைப்படம் வெளியானாலும் அதில் நிச்சயம் சூரி இருப்பார் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவர் சமீபத்தில் விருமன் படத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்துவருகிறார். நடிப்பு மட்டுமின்றி தொழிலில் ஈடுபட்டுவரும் சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலையும் நடத்திவருகிறார்.
அவரது ஹோட்டலுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நடிப்பு ஒரு பக்கம், பிஸ்னஸ் ஒரு பக்கம் என சூரி தற்போது பயங்கர பிசி.
இந்நிலையில், நடிகர் சூரி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சாமி கும்பிட வருகை தந்தார். அவரது வருகையையொட்டி ரசிகர்கள் தொந்தரவு இன்றி அவர் சாமி கும்பிடுவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனையடுத்து ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்ற சூரி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் பெற்று திரும்பினார்.
சூரியின் வருகையை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக முண்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் ரசிகர்களை கட்டுப்படுத்தி சூரியை அனுப்பி வைத்தனர்.