கவுகாத்தி: இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர், வடகிழக்கு பகுதிகளில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதன்கிழமை மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.
அசாம் அனைத்து மாணவர்கள் சங்கம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. அசாம் மாணவர்கள் சங்கம் நடத்த இருந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலில், வரும் நாட்களில் இதுகுறித்து கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக குடியேறிவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், அசாம் ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு ஆயுதபடைச் சட்டம், அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உள்நுழைவு சீட்டுத் திட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறுதல் போன்ற பிற பிரச்சினைகள் குறித்தும் போராட்டங்கள் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாமில் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டம், 2020-ல் கோவிட்-19 தொற்று பரவுவது வரை தொடர்ந்து நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 2014-ம் ஆண்டு டிச.31-க்கு முன்பாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955-ல் சில திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தில் முஸ்லிம்களை பற்றி குறிப்பிடப்படவில்லை என்று சர்ச்சை ஏற்பட்டது.