ஆளுநர் ஆகும் ரஜினி?; பாஜக போடும் பலே கணக்கு!

சூப்பர் ஸ்டாரு… யாருன்னு கேட்டா… சின்ன குழந்தையும் சொல்லும்… என்கிற பாடல் வரிகளே சாட்சியம் சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி உச்சத்தில் இருந்து வருகிறார்.

இவருக்கு உலகம் முழுவதும், லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்களில் ரஜினி காட்டிய ஸ்டைல் மற்றும் அபார நடிப்பு மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

நாளுக்குநாள் புகழும், ரசிகர்களும் அதிகரித்ததால் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதை தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நான் எப்போ வருவேன்.. எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என உணர்த்தினார்.

ஆனால், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை. எனவே, ரஜினி தான் நடிக்கும் படங்களை ஓட வைக்கும் யுக்தியாகவே அரசியல் குறித்து பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா மறைந்ததால் சூழலை தனக்கு சாதகமாக்க ரஜினி முடிவு செய்தார். அதற்காக தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் ரஜினி கூறியதால் அரசியல் களம் சூடு பிடித்தது.

இதையொட்டி ஆலோசனை கூட்டம், நேர்காணல் என அரங்கேற்றி பரபரப்பை கூட்டியதால் ரசிகர்கள் இன்ப கடலில் மூழ்கினர். இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் அரசியல் ஆசையை கைவிடுவதாக கூறி ஒட்டுமொத்த பரபரப்புக்கும் ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனால் விரக்தியும் அதிருப்தியும் அடைந்த ரஜினி ரசிகர்கள் தங்களுக்கு ஏதுவான கட்சிகளில் ஐக்கியமாகினர். இதன் பிறகு ரஜினி குறித்த எந்த தகவலும் வெளியில் வராமல் இருந்தது.

இதற்கிடையே ரஜினி நடித்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 6ம் தேதி திடீரென பிரதமர் மோடியை சந்தித்து ஓரிரு நிமிடம் பேசும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது.

பிரதமர் மோடியை ரஜினி சந்தித்து பேசியது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில் அடுத்த சில தினங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ரஜினி பேசியது பெரிதும் பேசு பொருளாக மாறியது.

இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தமிழக ஆளுநருடன் அரசியல் பற்றி பேசியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதோடு, தமிழக நலனுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பதாக ஆளுநர் கூறியதையும் ரஜினி போட்டுடைத்தார்.

ரஜினியின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தமிழர்களின் நலனுக்கான நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டு தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் ஆளுநரை ஆகா..ஓஹோ .. என ரஜினி புகழ்ந்ததை பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தாக வேண்டும் என்பதற்கு இணங்க, ரஜினி குறித்த முக்கிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போது, ரஜினியை பிரசார ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதற்கு பாஜக பலே திட்டத்தை கையில் எடுத்து உள்ளதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால், தற்போது கேரளா போன்ற ஏதாவது ஒரு மாநிலத்தில் ரஜினியை ஆளுநராக நியமித்து விட்டால் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவு பாஜக பக்கம் திரும்பிவிடும் என்பதோடு தமிழக மக்களின் மனதிலும் நீங்கா இடத்தை பிடிக்க முடியும் என்று பாஜக மேல்மட்ட தலைவர்கள் கணக்கு போடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.