புதுடில்லி :’டில்லியில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர்.
இங்கு, ஜம்மு – காஷ்மீர், டில்லி, ஹரியானா, பஞ்சாப், தமிழகம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கி இருப்பதாக ராஜ்யசபாவில் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இவர்கள் பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது.
‘முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருப்போர் வெளியேற்றப்படுவர்’ என, மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இந்நிலையில், ‘டில்லியில் தங்கி இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு திக்ரி எல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அளிக்கப்படும்’ என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்தறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று காலை தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன் விபரம்:
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும், சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் வரை தடுப்பு காவலில் வைக்கப்பட வேண்டும்.
அவர்கள் தற்போது தங்கியுள்ள இடங்களையே தடுப்பு காவல் மையங்களாக மாற்ற டில்லி அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement