சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழுவை தனியாகக் கூட்டியதும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் படி கடந்த ஜூலை 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியீடு, அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை, திமுகவில் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கம், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்புத் தீர்மானம் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.