தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்கான, கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2022.08.22 முதல் 2022.08.26 வரை இணையவழியூடாக வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கடவுச்சீட்டு கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் அதனைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்த்துடன் இணைந்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் விசேட நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பணியகத்தின் மாகாண அலுவலகங்கள் ஊடாக இம் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அத்தகைய தொழிலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பொருத்தமான பரிந்துரை கடிதங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பரிந்துரைக் கடிதங்களைப் பெறுவதற்கு பரீட்சைக் கட்டணமாக அறவிடப்படும் 10,109 ரூபாயை குறித்த அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
இந்த பரிந்துரைக் கடிதத்தை, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், ஏற்கனவே கடவுச் சீட்டை பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்த நடைமுறை பொருத்தமற்றது. மேலும் அவர்கள் ஒன்லைன் ஊடாக பரீட்சைக் கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டை ஸ்கேன் (ஊடு கதிர்ப்படம்) செய்து அனுப்புவதன் மூலம் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.