இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில்
தமிழ் சினிமாவில் கேரக்டர் நடிகையாக நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் என நான்கு படங்களை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் சமுத்திரகனியை நாயகனாகவும், மிஷ்கினை வில்லனாகவும் வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தின் இசை பணிகளுக்காக இளையராஜாவை சந்தித்தபோது அவர் நாற்காலியில் அமர்ந்து ஆர்மோனியத்தில் டியூன் போட, கீழே தரையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அந்த புகைப்படங்களை பார்த்த சில நெட்டிசன்கள், மற்றவர்களையும் தனக்கு இணையாக சேரில் உட்கார வைத்தால் இளையராஜா குறைந்து விடுவாரா? சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதர் என்று அவரை விமர்சித்து இருந்தார்கள்.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், அவர்களுக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், இளையராஜா கடவுளுக்கு சமமானவர். அவரது காலடியில் அமர்ந்திருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதுமட்டுமின்றி தரையில் உட்காருவது உடம்புக்கு நல்லது. அதனால் இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த நெட்டிசன்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.