புதுடெல்லி: காற்று மாசுவால் உலக முழுவதும் 17 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் டெல்லி முதலிடம் பிடித்துள்து. அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சுகாதார பாதிப்பு அமைப்பு’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலகளவில் 7,239 நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, நைட்ரஜன் டை ஆக்சைடு மாசு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
அதிக தீங்கு விளைவிக்கும் மோசமான காற்று மாசுவால் (பிஎம்2.5) உலகளவில் 7,239 நகரங்களில் 17 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு, மத்திய ஐரோப்பாவில் உள்ள நகரங்கள் பெரியளவில் பாதித்துள்ளன. 2010-2019ம் ஆண்டு வரையில் பிஎம் 2.5 மாசு அதிகரித்துள்ள 20 நகரங்களில் 18, இந்தியாவில் உள்ளன. மற்ற 2 நகரங்கள் இந்தோனேசியாவில் உள்ளன.
பிஎம் 2.5 மாசு பாதிப்பு மிகக் கடுமையான அதிகரித்துள்ள 50 நகரங்களில் 41, இந்தியாவில் உள்ளன. 9 நகரங்கள் இந்தோனேசியாவில் உள்ளன.
இதே காலக்கட்டத்தில் இந்த மாசு மிகவும் குறைந்துள்ள 20 நகரங்கள் அனைத்தும் சீனாவில் உள்ளன. நைட்ரஜன் டை ஆக்சைடு பாதிப்பில் சீனாவின் ஷாங்காய் முதலிடமும், ரஷ்யாவின் மாஸ்கோ 2வது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் லட்சம் பேரில் 106 பேர் பலி
பிஎம் 2.5 அளவு காற்று மாசு நுண்ணிய துகள்களை கொண்டது. சுவாசத்தின் மூலம் இவை சுவாசக் குழாய், நுரையீரலில் ஊடுருவி அழற்சியை உண்டாக்குகின்றன. இது இருதய, சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரை பறிக்கிறது. இந்த துகள்களால் டெல்லியில் 2019ம் ஆண்டில் லட்சம் பேரில் 106 பேர் இறந்துள்ளனர்.