பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பரிசு!

ஒருநாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், க.பொன்முடி, த.மோ.அன்பரசன், சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். டெல்லி சென்ற முதலமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு, தமிழகத்தில் இருந்து கொண்டுச்செல்லப்பட்ட புதிய டொயோட்டா ஃபார்ச்சூனரில் அமர்ந்து ஸ்டாலின் பயணித்தார்.

முதலில் காலை 10.30 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, நினைவு பரிசையும் வழங்கி கவுரவித்தார். மரியாதை நிமிர்த்தமான இந்த சந்திப்பு சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றது.

அதன் பின்னர், 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவை சந்தித்த முதலமைச்சர், அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதோடு, நீட் விலக்கு மசோதவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் அவருக்கு தமிழகத்தின் பாரம்பரிய சிறுதானியங்களை பரிசாக வழங்கினார். மேலும், அவருடன் 20 நிமிடங்கள் பேசிய ஸ்டாலின் முதலில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு நன்றி தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் பற்றிய புத்தக தொகுப்பு ஒன்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் நீட் விலக்கு மசோதா ஒப்புதல், ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமருக்கு முதலமைச்சர் வழங்கிய பரிசு பெட்டியில், பாரம்பரிய தானிய வகைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கம்பு, வரகு, தினை, சாமை, சீரக சம்பா, குள்ளக்கார், கேழ்வரகு என ஒன்பது வகையான சிறுதானியங்கள் மற்றும் நெல் வகைகள் இடம் பெற்றிருந்தன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.