விடுமுறை நாட்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய ஊர்களுக்கு ரயில் சேவை இல்லாததால், ஆம்னி பேருந்துகளை நம்பியே அவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு செல்வதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
சுதந்திர தினத்தோடு சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், கோவையில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கோவை வடக்கு, மேற்கு, சூலூர், கோவை மைய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மொத்தம் 509 ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்தனர். இதில், 93 பேருந்துகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ.1.91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வரி கட்டாத ஓர் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 3 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டு, கூடுதலாக பெறப்பட்ட ரூ.15 ஆயிரம் மீண்டும் அந்த பேருந்தில் பயணித்த பயணிகளிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுமுறை நாட்கள், விசேஷ காலங்களில் தொடர்ந்துவரும் இந்த பிரச்சினை குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா.லோகு கூறியதாவது:
ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக போக்குவரத்து துறை எந்த கட்டணமும் நிர்ணயம் செய்யாததால் தங்களது பேருந்துகளுக்கு ஏற்ப அவர்களாகவே கட்டணங்களை உயர்த்தி வசூல் செய்து வருகின்றனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவிக்கிறது.
ஆனால், கட்டணமே நிர்ணயம் செய்யாத நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை எவ்வாறு பொதுமக்களால் உறுதி செய்ய முடியும் என்ற கேள்விக்கு போக்குவரத்து துறையிடம் இதுவரை பதில் இல்லை. அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த பேருந்துகளுக்கு வரி செலுத்தி இருக்கிறார்களா என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு தணிக்கை அறிக்கை வழங்கி விடுகிறார்கள்.
அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை. இதனை முறைப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து ஆம்னி பேருந்துகளுக்கும் கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “தற்போது இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒப்பந்த ஊர்திகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அவற்றுக்கு கட்டணம் நிர்ணயிக்க முடியாத நிலை உள்ளது.
மேலும், அவை குறிப்பிட்ட வழித்தடத்தில்தான் இயங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆம்னி பேருந்து தவிர இயங்கிவரும் மற்ற தனியார் பேருந்துகள் ஸ்டேஜ் கேரேஜ் பர்மிட் மூலம் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு வழித்தட தூரத்தை வைத்து, ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விதிமீறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதேபோல, ஆம்னி பேருந்துகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமெனில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் அரசு திருத்தங்களை செய்ய வேண்டும். மேலும், அரசு தனது கொள்கை முடிவை மாற்ற வேண்டும்” என்றனர்.