புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. குலாம் நபி ஆசாத்இந்நிலையில், அங்கு சட்டப் பேரவை தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தேர்தல் அறிக்கை குழு, பிரச்சாரக் குழு, அரசியல் விவகாரக் குழு என பல புதிய குழுக்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளது. இதில், பிரச்சாரக் குழு தலை வராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பிரச்சாரக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகு வதாக ஆசாத் அறிவித்தார். இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். உடல்நிலை காரணமாக இ்ந்தப் பதவியை ஏற்க முடியவில்லை. பொறுப்பு வழங்கியதற்காக நன்றி என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஆசாத் கடிதம் எழுதி யுள்ளதாக கூறப்படுகிறது.
அகில இந்திய அளவில் காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் மத்திய அமைச்சர் பதவியையும் வகித்தவர் குலாம் நபி ஆசாத். மேலும், இவர் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில், அவருக்கு பிரச்சாரக் குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது பதவியிறக்க நடவடிக்கை என கருதியதன் காரணமாகவே ஆசாத் அந்தப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலுக்கு முடிவு கட்டும் விதமாகவே ஆசாத்துக்கு அந்தப் பொறுப்பை சோனியா வழங்கியதாக கூறப்படும் நிலையில் அவரின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஜி-23 தலைவர்களில் ஆசாத்தும் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.