பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ளது வி.களத்தூர் கிராமம். கடந்த 1912-ம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் தொடங்கி இந்து – முஸ்லிம் தரப்பு மக்களிடையே மோதல் போக்கு இருந்துவந்தன.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா, எஸ்.பி மணி மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் நிறைமதி, வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்பாக இந்து சமுதாய முக்கியஸ்தர்களையும் இஸ்லாமிய சமுதாய முக்கியஸ்தர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகத் தீர்வு காணப்பட்டது.
இதில், எவ்வித பிரச்னையும் இன்றி அமைதியான முறையில் திருவிழா நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாவிளக்கு, பூரணி பொங்கல், சுவாமி திருவீதி உலா எனக் கடந்த ஜூலை 30-ம் தேதி திருவிழா நடைபெற்றது.
எந்தவித பிரச்னையும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் மற்றும் எஸ்.பி மணி முன்னிலையில் திருவிழாவைத் தொடங்கி வைக்க வந்த இஸ்லாமிய மக்களுக்கு இந்து சமய பெரியோர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் இந்து சமய முக்கியஸ்தர்கள் ஒருபுறமும் இஸ்லாமிய ஜமாத் முக்கியஸ்தர்கள் ஒரு புறமும் இணைந்து பூரணி, பொங்கல், மாவிளக்கு, சுவாமி திரு வீதிஉலா தேரை இழுத்து விழாவைத் தொடங்கி வைத்தனர்.
110 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த இரு தரப்பு ஒற்றுமையைப் பாராட்டிக் கௌரவிக்க நினைத்த பெரம்பலூர் எஸ்.பி மணி வி.களத்தூர் இந்து, இஸ்லாமிய முக்கிய பிரமுகர்களை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்தார். அங்கு எஸ்.பி தலைமையில் நடைபெற்ற நல்லிணக்க விருந்து உபசார நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியாவும் கலந்து கொண்டார். இந்து இஸ்லாமிய சமுதாய முக்கியஸ்தர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். “வீ.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகளாக இந்து முஸ்லீம்களுக்கு நடந்த பிரச்னையை நீதிமன்ற தீர்த்து வைத்தாலும், மன ரீதியிலான பிரச்னை தீர்ந்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று கலெக்டரும், எஸ்.பி மணியும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பை அங்காளி, பங்காளிகளாகவே மாற்றியிருக்கிறார்.
இரு தரப்புமே ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்து இன்று, மதமல்ல முக்கியம், மனிதமே பிரதானம் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்கள். இதற்கு முழு மூச்சாக வேலை பார்த்திருக்கிறார்கள் இரு அதிகாரிகள். அவர்களின் செயல்பாட்டை சமூக ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை வெகுவாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.