சென்னை: பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய கடற்படையில் நிரந்தர அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், தொழில்நுட்பப் பிரிவில் 25 இடங்களும், கல்விப் பிரிவில் 5 இடங்களும் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 12-ம்வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண்களும், ஆங்கிலப் பாடத்தில் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 2003ஜுலை 2 மற்றும் 2006 ஜனவரி1-ம் தேதிக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். இப்பதவிக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல்விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
அக்னிபாதை திட்டத்தில்…
இதேபோல, அக்னிபாதை திட்டத்தின் கீழ், ராணுவத்தில் கிளார்க், ஸ்டோர் கீப்பர்,டிரேட்ஸ் மேன், தொழில்நுட்பம் மற்றும் பொதுப் பணி ஆகிய பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நவ. 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
வேலூரில் உள்ள காவலர் தேர்வு பள்ளியில் நடைபெறும் இம்முகாமில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் வரும் செப். 3-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.