ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு. 2 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆகப் பிரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்ட போதும் அம்மாநிலத்தில் இதுவரை அரசியல் நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை. முதல் கட்டமாக தொகுதிகள் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவும் மிகப் பெரும் சர்ச்சையானது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கான தேர்தல் நடத்தப்படக் கூடிய சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. வாக்குச் சாவடிகள் மறுசீரமைத்தல், வாக்குச் சாவடிகளின் பெயர் மாறுதல்கள் உள்ளிட்ட பணிகள் ஆகஸ்ட் 30-ல் நிறைவடையும். அத்துடன் இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் பணிபுரியக் கூடிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் தேர்தலை ஒத்தி வைப்பது; வெளி மாநிலத்தவருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவது அனைத்தும் தேர்தல் ஆதாயத்துக்குதான். ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து பாஜக ஆள வேண்டும் என்பதற்கான முடிவுதான் இது என்றார்.
மற்றொரு முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா கூறுகையில், உண்மையான வாக்காளர்கள் குறித்து பாஜக அச்சப்படுகிறது. இப்படி வெளி மாநிலத்தவரை வாக்காளராக சேர்த்தாலும் அது பாஜகவின் வெற்றிக்கு உதவப் போவது இல்லை என்றார்.