`இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக்கூட்டத்துக்குப்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே புதிய நிர்வாகிகளை நியமித்தனர். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இந்த நியமனங்கள் எதுவும் செல்லாததாகி இருக்கிறது.
நேற்று இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம் அப்போது பேசிய அவர், `அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகளை செய்தோம்.
அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும்” என்றார்.
இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ள போதிலும்கூட, அவரது அழைப்பை இபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. தனது எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM