அன்காரா: தன்னை தீண்டிய பாம்பினை 2 வயது குழந்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் துருக்கில் நடந்துள்ளது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இது நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தாது. எதையும் விளையாட்டுப் பொருட்களாகவே பார்க்கும் குழந்தைகளுக்கு பாம்பும் ஒன்றுதான், கயிறும் ஒன்றுதான். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது துருக்கி நாட்டில் நடந்துள்ளது.
துருக்கியில் உள்ள பாந்தன் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்கு முன்பு 2 வயது குழந்தை நேற்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டுத் தோட்டத்தில் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று அங்கு வந்தது. குழந்தையும் பாம்பிடம் ஒடிச் சென்று அதனை பிடிக்க முயன்றிருக்கிறது. இதனால் பாம்பு அந்தக் குழந்தையின் முகத்தில் சட்டென கடித்துள்ளது.
இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அலறியுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட குழந்தையின் பெற்றோர் அங்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சியில் ஆழந்துவிட்டனர். ஏனெனில், குழந்தையின் வாயில் ரத்தம் சொட்ட பாம்பு ஒன்று இறந்து கிடந்திருக்கிறது.
இதையடுத்து, வாயில் இருந்து பாம்பை அப்புறப்படுத்திய பெற்றோர், குழந்தையின் முகத்தை பார்த்த போது அதில் பாம்பு கடித்த காயம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் குழந்தையை அனுமதித்ததனர்.
பாம்புக் கடிக்கான உடனடி சிகிச்சை மேற்கொண்டதால் குழந்தை ஆபத்தான கட்டத்தை தாண்டியது. எனினும் மூன்று நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன் பின்னர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, பாம்பு தன்னை தீண்டியதும் உடனடியாக அந்தக் குழந்தை பாம்பை பிடித்து கழுத்தில் கடித்தது தெரியவந்தது. நீண்டநேரமாக கழுத்தில் கடித்ததால் பாம்பு இறந்திருக்கிறது.
ஒரு பாம்பை 2 வயது குழந்தை கடித்துக் கொன்ற சம்பவம் துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உ.பி.யிலும்…
துருக்கியில் நடைபெற்றதை போன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஹார்டாய் கிராமத்தில் வயல் வரப்பில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு அவரை காலில் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, அந்தப் பாம்பை துரத்திச் சென்று கடித்து கழுத்தை துண்டாக்கினார். அதன் பின்னர் அதே பாம்பை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற அவர், நடந்த விஷயத்தை மருத்துவரிடம் சாகவாசமாக கூறியுள்ளார். கடித்த பாம்பை கொண்டு வந்ததால் உடனடியாக அது எந்த வகை பாம்பு என உறுதி செய்து, அதற்கேற்ற சிகிச்சையை அளித்து இளைஞரின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர்.