சென்னை: ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதப்படட்டும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் வல்லுநர் குழு அமைந்து பரிந்துரை பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு, சூதாட்ட நிறுவனங்களுடன் கலந்தாய்வு என தேவைக்கும் அதிகமாகவே தமிழக அரசு முன்தேவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத் தடையாகத் தான் இருக்க வேண்டும். எனவே, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும்; ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு உடனே முடிவுரை எழுதப்பட வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.