ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று மாலை நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஷியா மற்றும் சன்னி பிரிவினரிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று மாலை தொழுகையின் போது நிகழ்ந்த திடீர் குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த சம்பத்தில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கைப்பற்றிய நிலையில், கடந்த 15-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் காபூலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதல் சம்பவத்திற்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.