தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பணிக்காக, கல்வி நிலையங்களுக்கு செல்வதற்காக, தனிப்பட்ட வேலைகளுக்காக என கோடிக்கணக்கான பெண்கள் தினமும் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் குடும்ப பட்ஜெட்டில் 8 முதல் 10 சதவீதம் மிச்சமாகிறது என கூறப்படுகிறது.
இதன்மூலம் பெண்கள் யாரை நம்பியும் இருக்காமல் பணிக்காக, கல்விக்காக வெளியில் வருவது அதிகரிக்கும், இது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு தீர்வு காணப்படுகின்றன.
ஆனால் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஆண்களால் சில இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
“*பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது.
*பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.
*நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம்.
*ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது. ”
என பல்வேறு அறிவுறுத்தல்கள் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளிலும் மேற்கண்டவாறு திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.