வங்க எழுத்தாளரின் 'ஆனந்தம் மடம்' நாவலைத் தழுவி தயாராகும் '1770'

பிரபல எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வங்காள நாவலான 'ஆனந்த மட'த்தை தழுவி '1770' எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகிறது. இதனை எஸ்.எஸ்.ராஜமவுலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார்.

இயக்குநர் அஸ்வின் கங்கராஜு பேசுகையில், '' இந்த தலைப்பு எனக்கு சவாலாக இருந்தது. ஆனால் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன். ஒரு படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திய படைப்புகள், வாழ்க்கையை விட உணர்வுகளும் ஆக்ஷனும் மிகுந்த கதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். அந்த தருணத்தில் இந்த கதை எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என தோன்றியது. தொடக்கத்தில் சிறிது தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் கதாசிரியர் ராம் கமல் முகர்ஜியை சந்தித்ததும், கதையை அவரது கோணத்தில் கேட்டதும் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது'' என்றார்.

கதாசிரியர் வி. விஜேந்திர பிரசாத் பேசுகையில், ''வந்தே மாதரம் என்பது மந்திர வார்த்தை என நான் உணர்கிறேன். கொடுங்கோன்மை மற்றும் அநீதிக்கு எதிராக தேசம் ஒன்றுபட மகரிஷி பக்கிம் சந்திர சட்டர்ஜி வழங்கிய மந்திர சொல் அது. அதனை நாங்கள் '1770' படைப்பில் கையாண்டிருக்கிறோம். அத்துடன் சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முகம் அறியாத வீரர்களின் கதையுடன் இதனை இணைந்திருக்கிறோம்.” என்றார்.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது. நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு முன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. தீபாவளி பண்டிகையின் போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.