“தனிமையில் இருப்பவனுக்குதான் உறவின் அவசியம் தெரியும்’’ – ரத்தன் டாடா இப்படி சொல்ல என்ன காரணம்?

இந்தியத் தொழிலதிபர்களில் ரத்தன் டாடாவுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. டாடா நிறுவனத்தின் தலைமையை அவர் ஏற்றுக்கொண்ட பிறகுதான் இந்தியத் தொழில் துறை அதிவேகத்தில் வளர ஆரம்பித்தது. சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்தை தலைமை தாங்கி பெரும் தொழில் புரட்சிக்கு வித்திட்டார். அதனால்தான் இன்றைய இளைய தொழிலதிபர்கள் பலரும் ரத்தன் டாடாவைத் தங்கள் குருவாகப் பின்பற்றி நடக்கிறார்கள்.

டாடா நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பை என்.சந்திரசேகரிடம் தந்து அவருக்கு வழிகாட்டிவரும் அதே வேளையில், தனக்குப் பிடித்த மாதிரியான சில வேலைகளையும் அவர் செய்துவருகிறார்.

ரத்தன் டாடாவுடன் சாந்தனு நாயுடு

புதிய ஐடியாக்களுடன் தொழில் தொடங்க வருபவர்களை உற்சாகப்படுத்தும் குணம் அவரிடம் எப்போதுமே உண்டு. அதிலும் குறிப்பாக, வித்தியாசமான ஐடியாக்களுடன் வரும் இளைஞர்கள் ஊக்கப்படுத்தி, அவர்கள் ஆரம்பித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அவர் முதலீடும் செய்துவருகிறார்.

ஏற்கெனவே அவர் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது ‘குட் பெல்லோஸ்’ (Good Fellows) என்கிற நிறுவனத்தில் இப்போது முதலீடு செய்திருக்கிறார். ஓய்வுக் காலத்தில் உதவும் வகையில் மூத்தக் குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார்.

‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் சாந்தனு நாயுடு என்ற 28 வயது இளைஞர். இவர் வேறு யாருமில்லை, ரத்தன் டாடாவின் உதவியாளராக இருந்துவருகிறார். அதனால் இவர் இன்டர்நெட்டில் ட்ரெண்டாகி வருகிறார். தற்போது ‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியதன் காரணமாக கவனம் பெற்றிருக்கிறார்.

குட் பெல்லோஸ்

‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்துக்கான ஜடியாவும் நோக்கமும் அருமையானது. அதாவது, யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்துவரும் மூத்தக் குடிமக்களுக்கு உதவும் நோக்கில் அவர் துவக்கியதுதான் ‘குட் பெல்லோஸ்’. திறமையாகப் படித்துப் பட்டம் முடித்த இளைஞர்களை வேலைக்கு எடுத்து, பிரத்யேகமாக பயிற்சி தந்து, மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக, மூத்த குடிமக்களுடன் எமோஷனலாக தங்களை கனெக்ட் செய்துகொண்டு வேலை செய்யும் இளைஞர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது.

இளைஞர்கள் மூத்தவர்களிடம் சகோதர மனபான்மையோடு, நட்பாக பழக அறிவுறுத்தபடுகிறார்கள். வாக்கிங் செல்வது, செய்தித்தாள் வசிப்பது, கேரம் போர்டு விளையாடுவது, குட்டித்தூக்கம் கூட அந்த இளைஞர்களுக்கு டாஸ்க்காக இருக்கும்.
தற்போது வரை 20 நபர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.

இது குறித்து சாந்தனு நாயுடு தெரிவிக்கையில், ‘‘இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் முதியவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து விடுவிக்க தொடங்கப்பட்டதே ‘குட் பெல்லோஸ்’’ என்று விளக்கம் தந்திருக்கிறார்.

ரத்தன் டாடாவுடன் குட் பெல்லோஸ் குழுவினர்

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா, “நெடுங்காலமாக தனிமையில் இருப்பவர்களுக்கு
மட்டுமே தெரியும் உறுதுணையின் அவசியம்” என்று சொல்லி இருக்கிறார். ரத்தம் டாடா திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குட் பெல்லோஸ்’ புது முயற்சி மட்டுமல்ல, முதியவர்களுக்குப் புத்துணர்ச்சியும்கூட…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.